சீனாவின் அராஜகம் தொடருது! அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி புதிய மேப் வெளியீடு!
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அண்டை நாடான சீனா, நமது நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியா- சீனா இடையேயான 1962-ம் ஆண்டு யுத்தத்தின் போது கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து அக்ஷாய் சின் என பெயரிட்டுக் கொண்டது. இதேபோல வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தம்முடைய நிலப்பகுதி என்றும் அது தென் திபெத் என்றும் தொடர்ந்து சீனா அழைத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டும் விட்டது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷ்யா சின் என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் எனவும் இடம்பெறச் செய்திருக்கிறது.
இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது. தைவானையும் தம்முடைய நிலப் பகுதியாக சொல்லிக் கொள்கிறது சீனா. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது சீனா.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல், பூட்டான் டோக்லாம் பீடபூமி மோதல்களை தொடர்ந்து இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருதரப்பும் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
சில நாட்களுக்கு முன்னர்தான் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மையை இருதரப்பும் உறுதி செய்ய வேண்டும் என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு சேட்டையை மீண்டும் தொடங்கிவிட்டது சீனா.












Click it and Unblock the Notifications