சீன பொருட்களுக்கு மீண்டும் அனுமதி.. மத்திய அரசு திடீர் முடிவு.. 5 ஆண்டு தடை நீக்கத்தின் பின்னணி
டெல்லி: மத்திய அரசு எடுத்த திடீர் முடிவால் தற்போது நம் நாட்டின் மார்க்கெட்டுக்குள் சீன பொருட்கள் மொத்தமாக நுழைய உள்ளது. நம் நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பல பொருட்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை விரைவுப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த திடீர் முடிவின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்கள் மோதிக்கொண்டனர். இதையடுத்து நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு மொத்தமாக துண்டிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சரிந்தது. நேரடி விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் இப்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட தொடங்கி உள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் எதிராக மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கை தான் காரணம். இதனால் அமெரிக்காவை சமாளிக்க நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது.
பிரதமர் மோடி சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனையை தீர்த்து வர்த்தக உறவை மேம்படுத்துவது பற்றி இருவரும் விவாதித்தனர். இந்நிலையில் தான் தற்போது இந்திய மார்க்கெட்டுக்குள் சீன பொருட்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்க உள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதாவது சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டியில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வந்தது. இதனால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் பல பொருட்களின் விலைகள் குறைந்தது. இதனால் பல பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டிவிகளின் எண்ணிக்கை அதிகளவில் விற்பனையாகி உள்ளது. அதேபோல் வாஷிங் மெஷின், டிஸ் வாசர்ஸ், பிரிட்ஜ் உள்ளிட்டவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக விற்பனையாகி உள்ளது.
இதனால் எலக்ட்ரானிக்ஸ், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், இரும்பு பொருட்கள், பிற தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களுக்கு நம் நாட்டில் தேவை அதிகரித்துள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்ய நம் நாட்டின் தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கும் பணியில் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இதற்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் சீனாவின் பொருட்கள் மீண்டும் நம் நாட்டுக்குள் நுழையும். விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளது. இதனால் வீட்டு உபயோக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், பொருட்களின் விநியோக சங்கிலியை நிலையாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர், ‛‛சீனா உள்பட பல நாடுகளை சேர்ந்த சப்ளையர்களுக்கான உரிமங்களை வழங்குவது மற்றும் புதுப்பிப்பு செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து ஒப்புதல் வழங்கப்படும். அதன்பிறகு இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) வெளிநாடுகளில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும். அதன்பிறகு அந்த நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கப்படும்'' என்று கூறினார்.
முன்னதாக நம் நாட்டுக்கு சீனா அரியவகை மேக்னட் ஏற்றுமதியை தொடங்கியது. இப்போது நம் நாடு சீனாவிடம் இருந்து எலக்ட்ரானிக்ஸ் உள்பட பிற பொருட்களை வாங்க அனுமதி வழங்குகிறது. இதன்மூலம் இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவு மேம்படும். அதேவேளையில் அதிகப்படியான சீனா பொருட்கள் நம் மார்க்கெட்டை ஆக்கிரமித்தால் அது நம் நாட்டின் உற்பத்தியாளர்களை பெரிய அளவில் பாதிக்கும். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications