சட்டென ஸ்டாலினை நோக்கி வந்த மோடி.. பக்கத்துல யாரு? ஆஹா.. அந்த ரியாக்சனை பார்க்கணுமே.. என்ன நடந்தது?
டெல்லி: நேற்று டெல்லியில் நடைபெற்ற ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக பிரதமர் மோடி பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களை தனி தனியாக சந்தித்து பேசினார். இவர்களுடன் சில நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
ஜி 20 கூட்டமைப்பிற்கு சுழற்சி முறையில் நாடுகள் தலைமை வகிக்கும். அந்த வகையில் 19 நாடுகளின் சுழற்சி முடிந்து மீண்டும் இந்தியா இந்த கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க தேர்வாகி உள்ளது. இதை மத்திய பாஜக அரசு தேசிய அளவில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது ஜி 20 கூட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
பச்சைக் கொடி காட்டிய டெல்லி.. தமிழ்நாடு அரசு இல்லத்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி? ஏன் என்னாச்சு?

ஜி 20
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடும் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆலோசனை
இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. உச்சி மாநாட்டை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடக்க உள்ள பல்வேறு கூட்டங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த கூட்டங்களை நடத்த வேண்டும். அதை எப்படி நடத்த வேண்டும். சிறப்பு விருந்தினர்களாக யார் எல்லாம் அழைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த வேண்டும், மத்திய அமைச்சர்களை அழைப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.

என்ன நடந்தது?
இந்த கூட்டத்திற்கு பின் வெளியே இருக்கும் வராண்டாவில் மாநில முதல்வர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தனர். பெரிதாக அரசியல் பேச அது இடம் கிடையாது. இதனால் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருந்தனர். அதிலும் மம்தா - ஸ்டாலின் நெருக்கம் என்பதால் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் ஸ்டாலின் உள்ளே சென்று அங்கு வளாகத்தில் இருந்த இன்னும் சில தலைவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எம்பி மற்றும் திமுக பொருளாளர் டிஆர் பாலு உடன் இருந்தார். இவர்களை பார்த்ததும், நேரடியாக அவர்களிடம் நெருங்கி வந்த பிரதமர் மோடி.. முதல்வர் ஸ்டாலினிடம் கை குலுக்கினார். அதன்பின் ஸ்டாலினிடம் மோடி எதோ சொல்ல.. ஸ்டாலின் உடனே சிரிக்க தொடங்கினார். அதற்கு பதிலாக மோடியும் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

விசாரித்தார்
இதை கேட்ட டிஆர் பாலு என்ன சார் இது என்பது போல கையை காட்டி குலுங்கி குலுங்கி சிரித்தார். இவர்கள் சுமார் 5 நிமிடம் அங்கு பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் இருவரும் அரசியல் எதுவும் பேசவில்லை. இது பொது நிகழ்வு. அதனால் இரண்டு பேரும் பொதுவாக நலம் விசாரித்துக்கொண்டனர். அரசியல் ரீதியாக எதுவும் குறிப்பிடவில்லை. இரண்டு பேரின் உடல்நலம் குறித்து விசாரித்துக்கொண்டனர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் உடல்நிலை சரியில்லை என்று தகவல் மோடிக்கு வந்து இருக்கிறது. அதை பற்றி நேற்று நடந்த சந்திப்பில் இவர்கள் பேசி உள்ளனர்.

சென்னை நிகழ்வு
சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இருவருமே நெருக்கமாக, நட்பாக இருந்தனர். மேடையில் இவர்கள் நெருக்கமாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவரை மேடையில் பாராட்டி பேசினார். மேடையில் அருகருகே அமர்ந்து இருவரும் நண்பர்கள் போல பேசிக்கொண்டு இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இவர்கள் இடையிலான அரசியல் வேறுபாடு தெரியவில்லை. அதேபோல்தான் நேற்று நடந்த கூட்டத்திலும் இவர்கள் அன்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.

கூட்டணியா?
கடந்த சில வாரங்களாக திமுக - பாஜக நெருங்கி போவதாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடந்து வந்தன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை திமுக அழைத்ததில் இருந்தே இந்த விவாதம் நடந்து வந்தது. பின்னர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் மோடி - ஸ்டாலின் இருவரும் நெருக்கமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக இரண்டு கட்சிகளும் நெருங்கி போவதாக விவாதங்கள் எழுந்தன. ஆனால்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் இங்கே அமைத்து இருக்கும் கூட்டணியை வலுப்படுத்துவோம். எப்படி சென்ற தேர்தலில், அதற்கு முந்தைய தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றோமோ அப்படி வெற்றிபெறுவோம். முப்பெரும் விழாவில் சொன்னது போல 40க்கு 40 என்று இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுகிறோம். அதன்பின் தேசிய அளவில் இருக்கும் நிலவரத்தை பொறுத்து எங்கள் செயல்பாடு இருக்கும். திமுகவின் தமிழ்நாடு கூட்டணி தொடரும். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல . இது கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணி தொடரும். தொடர வேண்டும் என்பதே என் விருப்பம், என்று ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.