உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியுடனும் மன நிறைவை அளிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிற ரீதியில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு அமைந்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மன நிறைவை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அரசு மரியாதை அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், திமுக ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மாலை 4.45 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி இல்லத்தில் 5 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்தது.

மோடி ஸ்டாலின் சந்திப்பு
முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதையடுத்து, நீட் தேர்வு விலக்கு, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார் மு.க ஸ்டாலின். அத்துடன், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், கச்சத்தீவை மீட்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

மன நிறைவு
தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த முதல்வர், பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சியும் மன நிறைவையும் அளிப்பதாக கூறினார். புதிய கல்விக்கொள்கைகளை திரும்ப பெற வேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

கச்சத்தீவு மீட்பு
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சலுகை அளிக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப் பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

எய்ம்ஸ் மருத்துவமனை
குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம்
உறவுக்குக் கை கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிற ரீதியில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். தமிழக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின், எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றி வருவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications