மன்மோகன் சிங் அரசில் புயலை கிளப்பிய நிலக்கரி ஊழல் வழக்கு.. முன்னாள் எம்பிக்கு 4 வருட சிறை
டெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது புயலை கிளப்பிய நிலக்கரி ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்பி விஜய் தர்தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தர்தா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அங்கிருந்து ராஜ்யசபா எம்பியாக 3 முறை தேர்வாகி செயல்பட்டு வந்தார். மத்தியில் கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது.

இந்த வேளையில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது விஜய் தர்தா ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் விஜய் தர்தா மீது நிலக்கரி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பதேபூர் கிழக்கு நிலக்கரி தொகுப்பை சட்டவிரோதமாக ஜேஎல்டி யவத்மால் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் பெற்றதாகவும், இதில் விஜய் தர்தாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
மேலும் இந்த வழக்கு மன்மோகன் சிங் ஆட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிஐ சார்பில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனதாக ஜூலை 13ல் நீதிபதி சஞ்சய் பன்சால் தெரிவித்தார்.
மேலும் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று நீதிபதி சஞ்சய் பன்சால் தீர்ப்பு வழங்கினார். அப்போது முன்னாள் எம்பி விஜய் தர்தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அதேபோல் விஜய் தர்தாவின் மகன் தேவேந்தர் தர்தா, ஜேஎல்டி யாவத்மால் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குனர் மனோஜ் குமார் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச் சி குப்தா, அரசு அதிகாரிகளான கேஎஸ் க்ரூபா மற்றும் கேசி சமாரியாக ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.இருப்பினும் இந்த 3 அதிகாரிகளுக்கும் மேல்முறையீடு செய்யும் வகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications