நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆன்லைனில் மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, வரும் ஜூன் 6ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்.. டெல்லியில் பிரம்மாண்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகப் புது சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே இணையத்தை ஆக்கிரமித்து இருப்பது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தான். நாட்டில் கல்வி முறையில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாகக் கரப்பான் பூச்சி ஜனதா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இது தொடர்பாக முதலில் ஆன்லைன் எதிர்ப்பு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா, இப்போது போராட்டக் களத்திலும் குதித்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா
வரும் ஜூன் 6ம் தேதி இந்த அமைப்பினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் படித்து வரும் இதன் நிறுவனர் அபிஜீத் திப்கே இதற்காக இந்தியா திரும்புகிறார். அபிஜீத் திப்கே இந்தியா திரும்புவது குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்தே, சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. பிரபலச் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள், அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக நாடு கடத்தப்படுகிறார் என்றும் சட்டம் தன் கடமையைச் செய்வதால்தான் அவர் இந்தியா வருகிறார் என்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
நாடுகடத்தல்?
ஆனால், இந்த 'டிபோர்ட்டேஷன்' புகார்களைக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. டெல்லியில் நடக்கவிருக்கும் மாபெரும் போராட்டத்திற்கு முன்பாக, அபிஜீத் திப்கேவின் இமேஜைக் கெடுப்பதற்காகவே திட்டமிட்டுப் பரப்பப்படும் போலிப் பிரச்சாரம் இது என்று அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். அதாவது அவர் நாடு கடத்தப்படவில்லையாம். மாறாகப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இந்தியா வருகிறார் என்பதை அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அபிஜீத் திப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் ஜூன் 6-ஆம் தேதி டெல்லி வந்து இறங்கியதும், விமான நிலையத்திலேயே போலீசார் என்னை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், என் மீதான தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.. எனது முழு கவனமும் நமது இயக்கத்தின் மீதும், நாம் நடத்தவிருக்கும் போராட்டத்தின் மீதும் தான் இருக்கிறது" என்றார்.
போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராகவும், கல்வித்துறையின் முறைகேடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர், இந்தக் கைது அச்சுறுத்தல்களையும் தாண்டி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு எப்படியாவது வந்து சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்தியாவின் கல்வி அமைப்பில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக நேரடிப் போர்க்களத்தில் இறங்குவதற்காகவே அபிஜீத் திப்கே தனது இந்தியப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்து என்ன
அவர் விருப்பப்பட்டு இந்தியா வருகிறாரா அல்லது அமெரிக்கச் சட்ட நடவடிக்கைகளால் திருப்பி அனுப்பப்படுகிறாரா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அவர் ஜூன் 6ல் டெல்லி வந்து இறங்கும்போது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தேசிய ஊடகங்கள் மத்தியில் பெரும் தொற்றாகப் பரவியுள்ளது. ஏர்போர்ட்டில் கைது செய்யப்படுவாரா அல்லது ஜந்தர் மந்தர் போராட்டம் புதிய கட்டத்தை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications