தேர்தலுக்கு ரெடி: காங்கிரஸ் அதிரடி முடிவு! ம.பி பொறுப்பாளராக சுர்ஜேவாலா.. கர்நாடக சம்பவம் தெரியும்ல!
டெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி, முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி காங்கிரஸ் தலைவராக அஜய் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநில சட்டமன்ற தேர்தல்: இதனால், இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக அனுகுகின்றன. இந்த 5 மாநிலங்களில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இந்த தேர்தலை தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றனர்.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, 2024 லோக்சபா தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக பணியாற்றி வருகிறது.
வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்ட பாஜக: இன்னும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் அதிரடி மாற்றம்: இதற்கிடையே, காங்கிரஸ் தலைமை, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளரை நியமித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மத்திய பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் கட்சியின் விவகாரங்களை டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜேபி அகர்வால் கவனித்து வந்தார். அவருக்குப் பதிலாக தற்போது சுர்ஜேவாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுர்ஜேவாலா பவர்: ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகச் செயல்பட்டார். கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பாஜகவை அகற்றி ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸுக்கு பாஜகவை எதிர்கொள்வதை விடவும் இன்னொரு விவகாரம் முக்கிய சவாலாக இருந்தது. அது சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையேயான அதிகாரப் போட்டி. இந்த பனிப்போரை திறம்படச் சமாளித்து வெற்றி கண்டதில் சுர்ஜேவாலாவுக்கு மிக முக்கிய பொறுப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் சுர்ஜேவாலாவின் அனுபவம், மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு முக்கிய அதிகார மையங்களாக விளங்கும் கமல் நாத் மற்றும் முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் ஆகியோரை நிர்வகிக்க அவருக்கு உதவும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அஜய் ராய்: மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரகு ஷர்மாவுக்குப் பதிலாக அவர் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ அஜய் ராய், உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வாரணாசியில் 2014 மற்றும் 2019 ஆகிய எம்.பி தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்துக் களமிறங்கி தோல்வியடைந்தவர் அஜய் ராய். இந்நிலையில், பிரிஜ்லால் காப்ரிக்கு பதிலாக அஜய் ராய் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications