வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த அஜய் ராய்? பின்னணி
டெல்லி: காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 46 இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. 7 வது கட்ட தேர்தல் ஜுன் 2ம் தேதி நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் புதிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 46 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் அசாம், அந்தமான் நிகோபார், சத்தீஸ்கர், மிசோரம், மேற்கு வங்க மாநிலங்களின் தலா ஒரு தொகுதி, ஜம்மு காஷ்மீரின் 2 தொகுதி, மத்திய பிரதேசத்தின் 12 தொகுதிகள், மகாராஷ்டிராவின் 4 தொகுதிகள், ராஜஸ்தானின் 3 தொகுதி, மணிப்பூர், உத்தரகாண்ட்டின் தலா 2 தொகுதி, தமிழ்நாட்டின் 7 தொகுதிகள், உத்தர பிரதேசத்தின் 9 தொகுதிகள் என மொத்தம் 46 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதியில் டேனிஷ் அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பகுஜன் சமாஜ் எம்பியாக உள்ள நிலையில் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் டேனிஷ் அலிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அஜய் ராய் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் அஜய் ராய் என்பவர் தற்போது உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
இவர் தனது அரசியல் பயணத்தை பாஜகவில் தொடங்கினார். பாஜகவின் மாணவர் பிரிவில் தொடக்கத்தில் செயல்பட்டார். மேலும் உத்தர பிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தார். இதில் 3 முறை பாஜகவில் இருந்தும், ஒருமுறை சுயேச்சையாகவும், ஒருமுறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்எல்ஏவாகி இருந்தார். ராய் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்த இவர் பாஜகவில் இருந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றார். அங்கிருந்து காங்கிரசுக்கு வந்த நிலையில் உத்தர பிரதேச மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2 முறை பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். அதாவது கடந்த 2014, 2019 தேர்தல்களில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது 3வது முறையாக அவர் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அஜய் ராய் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கினார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 ஓட்டுகள் பெற்று 3,71,784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாரணாசியில் போட்டியிட்ட ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் 2 லட்சத்து 9 ஆயிரத்து 238 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இதில் 75,614 ஓட்டுகளுடன் அஜய் ராய் 3ம் இடம் பிடித்தார்.
அதன்பிறகு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஜய் ராய் 2வது முறையாக பிரதமர் மோடியை வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எதிர்த்தார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 ஓட்டுகள் பெற்று 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இதில் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 1 லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்த நிலையில் அஜய் ராய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 548 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3ம் இடம் பிடித்தார். இந்நிலையில் தான் மீண்டும் அஜய் ராய் வாரணாசியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் அஜய் ராய் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தகைய சூழலில் தான் அவர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் வாரணாசியில் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தேர்தலுக்கு முந்தைய பல கருத்து கணிப்புகளில் வாரணாசியில் பிரதமர் மோடி வெல்வது உறுதி என்றே சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications