சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு.. டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை மிகவும் நீண்ட காலமாக சோனியா காந்தி வகித்து வந்தார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர் 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் தலைமையில் 2 முறை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.
இதையடுத்து மகன் ராகுல் காந்தி கடந்த 2017 ல் காங்கிரஸ் தலைவரானார். ஆனால் 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி செயல்பட்டு வந்தார்.

தலைவர் பொறுப்பில் விலகல்
இந்நிலையில் சமீபகாலமாக சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சோனியா காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியில் நடக்கும் கட்சியின் முக்கிய ஆலோசனைகளில் மட்டும் சோனியா காந்தி பங்கேற்று வருகிறார். பிற மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்வது, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை சோனியா காந்தி ஓரம்கட்டி உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் தான் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

என்ன பிரச்சனை?
இதற்கிடையே தான் இன்று மருத்துவமனை சார்பில் சோனியா காந்தியின் உடல் நலம் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனை டாக்டர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிங்ஸ் நிறைவு பெற்றதாக பேச்சு
முன்னதாக 5 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் சோனியா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛காங்கிரஸ் கட்சிக்கு பாரத் ஜோடோ யாத்திரை திருப்பு முனையாக அமைந்துள்ளது. இந்த யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் (அரசியல் பயணம்) நிறைவு பெற்றுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications