‛ஆட்டம் காணும் மோடியின் சேர்’.. அம்பானி, அதானி மீதான குற்றச்சாட்டு ஏன்? காங்கிரஸ் கூறும் காரணம்
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மோடியின் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது என்றும், அவரது நண்பர்களான அம்பானி, அதானியையே அவர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நேற்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில், சமீபத்திய தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அம்பானி மற்றும் அதானியிடமிருந்து பணம் வாங்கிவிட்டதாகவும், எனவேதான் அவர்களை விமர்சிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மோடியின் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது எனவே அவரது நண்பர்களையே குற்றம்சாட்ட தொடங்கியுள்ளார் என விமர்சித்திருக்கிறது.
சமீபத்தில் தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அம்பானி மற்றும் அதானியை குறிப்பிட்டு ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
"கடந்த காலங்களில் பெரும் பணக்காரர்கள் குறித்து விமர்சித்து வந்த காங்கிரஸ் இளவரசர்(ராகுல் காந்தி) இப்போது அப்படி பேசுவதில்லை. அதிலும் குறிப்பாக அம்பானி மற்றும் அதானி குறித்து குற்றச்சாட்டுகளை அவர் கைவிட்டிருக்கிறார். தேர்தல் தொடங்கியதிலிருந்து இந்த இருவர்கள் மீதான விமர்சனங்களை அவர் வைப்பதில்லை.
ஏன் இந்த திடீர் மாற்றம்? இது குறித்து காங்கிரஸ் இளவரசரிடம் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அம்பானி, அதானி குறித்து பேசாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? காங்கிரஸ் கட்சி இவர்களிடமிருந்து தேர்தல் நிதியாக எத்தனை லாரிகளில் பணத்தை பெற்றது? இது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு அக்கட்சி விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது" என்று பேசியிருந்தார்.
மோடி பிரதமரான பின்னர், தேர்தல் பரப்புரையில் அம்பானி, அதானி குறித்து விமர்சன ரீதியில் பேசியிருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்திருக்கிறது. அதாவது, "லாரிகளில் காங்கிரஸ் பணம் பெற்றதாக பிரதமர் கூறுகிறார். அப்படியெனில் அமலாக்கத்துறையை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், "காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று பிரதமர் தனது சொந்த நண்பர்களை தாக்கி பேச ஆரம்பித்துள்ளார். மோடியின் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. இதுவே முடிவின் உண்மையான போக்கு" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அம்பானி மற்றும் அதானி குறித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசியிருந்தது தேதி வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications