நடுவானில் ஷாக்- ஒட்டுமொத்த காங். 'தலை'களும் உற்சாக குரல் எழுப்ப கார்த்தி சிதம்பரம் மட்டும்..
டெல்லி: மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை தொடக்க விழாவுக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணித்த போது கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் செயல்பாடு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலை முன்வைத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று மணிப்பூரில் தொடங்கினார். மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு முதலில் யாத்திரையை மணிப்பூரில் தொடங்க அனுமதி மறுத்தது. ஆனால் எதிர்ப்புகள் வலுவானதால் மணிப்பூர் அரசு பின்வாங்கி ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது.

இதனையடுத்து மணிப்பூரில் இன்று ராகுல் காந்தி தமது யாத்திரையை தொடங்கினார். 67 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை மும்பையில் நிறைவடைய உள்ளது. 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
முன்னதா மணிப்பூர் யாத்திரை தொடக்க விழாவுக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் ஒரே விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் பயணித்தது அவர்களிடையே பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தியது. இந்த உற்சாகத்தை காட்டும் வகையில் விமானத்திலேயே பல்வேறு முழக்கங்களை ஆராவரமாக எழுப்பினர்.

விமானத்தில் பயணித்த அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் உற்சாகமாக குரல் எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இதில் விவாதிக்க என்ன விஷயம் இருக்கிறது? என்கிறீர்களா?.. இத்தனை காங்கிரஸ் தலைவர்கள் கோஷம் எழுப்பும் போது ஒரே ஒருவர் மட்டும் விமானத்தில் கண்களை மூடி தியான நிலையில் இருப்பதாக அந்த வீடியோவில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது.. அவர் வேறு யாருமல்ல.. தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்தான். இதனை வைத்துதான் விவாதம் நடைபெறுகிறது.
அண்மையில் டிவி பேட்டி ஒன்றில், மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை என கார்த்தி சிதம்பரம் பேட்டி கொடுத்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவும் கார்த்தி சிதம்பரம் எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. ஆனால் தாம் அப்படி பேசவில்லை; தாம் அளித்த பேட்டி இதுதான் என டெல்லியில் கோள்மூட்டுபவர்களுக்காக என விளக்கம் கொடுத்திருந்தார் கார்த்தி சிதம்பரம்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு கை கொடுத்தபடியே வந்தார். ஆனால் அப்போது கார்த்தி சிதம்பரத்தை பார்த்த உடன் ராகுல் காந்தி முகத்தை திருப்பிக் கொண்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications