மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பரபர ஆலோசனை
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு, டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் ஆகிய விவகாரங்களில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி தருவது குறித்து டெல்லியில் 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி வியூகம் வகுத்தனர்.
பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாய சட்டங்கள் உள்ளிட்டவைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரகாலமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வருகின்றனர். எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கூட்டப்படுவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

14 எதிர்க்கட்சி தலைவர்கள்
இந்த நிலையில் டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. லோக்சபா, ராஜ்யசபாவில் உள்ள 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ர இக்கூட்டத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார்

பாஜக அரசுக்கு எதிராக..
ஏற்கனவே லோக்சபாவில் பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதேபோல் விவசாய சட்டங்கள், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி தருவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பா.ஜ.க. அவதூறு
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து எழுப்புகின்றனர். நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம்; ஆனால் பா.ஜ.க. அரசுதான் நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்குவதாக அவதூறு பிரசாரம் செய்கிறது என்றார்.

சிறப்பு- ராகுல் அட்வீட்
இக்கூட்டத்தில் திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல், சிவசேனாவின் சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டு கட்சியின் ஹஸ்னைன் மசூதி, சிபிஎம் இளமாரம் கரீம், சிபிஐ-ன் பினோய் விஸ்வம், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான், ஆர்ஜேடியின் மனோஜ் ஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சந்திப்பு தொடர்பான படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒட்டுத்தமாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தியது சிறப்பு வாய்ந்த தருணமாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications