உதயநிதி சொன்னதுல தப்பேயில்லை? விளையாட்டு துறை நிதி பகிர்வில் மத்திய அரசை வெளுத்த காங்கிரஸ்! டேட்டா
டெல்லி: பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு 48 வீரர்களை அனுப்பிய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வெறும் ரூ.144 கோடி மட்டுமே ஒதுக்கிய மத்திய அரசு 9 வீரர்களை அனுப்பிய குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்துக்கு ரூ.864 கோடி அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான டேட்டாவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனுமான பர்கத் சிங் விளாசி உள்ளார்.
2024-2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல் விளையாட்டு துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தாராளம் காட்டவில்லை. இதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதாவது கடந்த பட்ஜெட்டின்போது விளையாட்டு துறைக்கு ரூ.3396.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை விளையாட்டு துறைக்கான நிதி என்பது ரூ.3,442.32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடும்போது வெறும் ரூ.45.36 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிலும் கேலோ இந்தியா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. கேலோ இந்தியா திட்டம் என்பது நம் நாட்டின் பல்வேறு விளையாட்டுகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முக்கிய திட்டமாகும். மொத்தம் இந்த முறை ரூ.3,442.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டதில் கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ.2,168.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறையை காட்டிலும் வெறும் ரூ.20 கோடி மட்டுமே அதிகம்.
இந்நிலையில் தான் விளையாட்டு துறையில் நிதி ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி உள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்தள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார். கேலோ இந்தியா திட்டத்தின் தமிழகத்துக்கு வெறும் ரூ.20.40 கோடி மட்டுமே ஒதுக்கியதால் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை கடிந்து கொண்டார்.இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றம் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்துக்கும் - குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது. விளையாட்டுத்துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பா.ஜ.க.வின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்'' என விமர்சனம் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவுமான பர்கத் சிங் புள்ளி விபரங்களுடன் கடுமையாக மத்திய அரசை தாக்கி உள்ளார். இதுதொடர்பாக பர்கத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்த பட்டியலை மாநிலங்கள் வாரியாக வெளியிட்டுள்ளார். அதில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.2,168.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்தர பிரதேசம், குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ளது
மேலும் அவர் அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு 48 விளையாட்டு வீரர்களை அனுப்பிய பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு முறையே ரூ.78 கோடி, ரூ. 66 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேே சமயம் உத்தர பிரதேசம் மற்றுமு் குஜராத் 9 விளையாட்டு வீரர்களை மட்டுமே அனுப்பி உள்ளது. இதில் உத்தர பிரதேசத்துக்கு ரூ.438 கோடி, குஜராத்துக்கு ரூ.428 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமான செயல்பாடு இல்லையா? மாநிலங்களுக்கு எதிரான இந்த பாகுபாட்டை பாஜக இன்னும் எவ்வளவு காலம் தொடரும்?'' என விமர்சனம் செய்துள்ளார்.
தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறன்றன. இதில் இந்தியாவில் இருந்து வீரர், வீராங்கனைகள் என்று மொத்தம் 117 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஹரியானாவில் இருந்து 24 பேர், பஞ்சாப்பில் இருந்து 1 9 பேர் பங்கேற்றுள்ளனர். குஜராத்தில் இருந்து 2 பேர், உத்தர பிரதேசத்தில் இருந்து 7 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதனை குறிப்பிட்டு தான் காங்கிரஸ் எம்எல்ஏ பர்கத் சிங் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு 48 வீரர்களை அனுப்பிய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வெறும் ரூ.144 கோடி மட்டுமே ஒதுக்கிய மத்திய அரசு 9 வீரர்களை அனுப்பிய குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்துக்கு ரூ.864 கோடி அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான டேட்டாவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனுமான பர்கத் சிங் விளாசி உள்ளார்.












Click it and Unblock the Notifications