டெல்லியில் எதிரொலித்த ரெய்டு.. பாஜகவுக்கு எதிராக கொதித்த எதிர்க்கட்சிகள்! கார்கே, கெஜ்ரிவால் கண்டனம்
டெல்லி: திமுக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு தழுவிய அளவில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சிக்கிய டைரி + ஆவணங்கள்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் நின்ற காரில் இருந்து கைப்பற்றிய அமலாக்கத்துறை!
தேசிய அளவில் எதிர்ப்பு: சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், பொன்முடியின் மகனுமான கௌதமசிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த சோதனைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கார்கே கண்டனம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக மாநிலம் பெங்களுரில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதனை திசைதிருப்பவே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். எதிர் அணியினரை மிரட்டுவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும் சூழ்ச்சியே இந்த சோதனை.
மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயத்திற்கு எதிராக நடைபெறும் இந்த கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் யாரும் அஞ்சமாட்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம். பாஜக அரசு எதிர்க்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கிறது. அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications