ராமரின் பாதையில் ராகுல் காந்தி.. ராவணனின் பாதையில் பாஜக.. ஒரே போடாக போட்ட சல்மான் குர்ஷித்
டெல்லி: நாடு முழுவதும் பாரத் ஜடோ நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ராமரின் பாதையில் பயணிப்பதாகவும், பாஜக ராவணனின் பாதையில் பயணிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
பாஜகவின் கொள்கைகளை எதிர்த்தும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தவும் காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து இந்த யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 12 மாநிலங்கள் வழியாக சுமார் 150 நாட்கள் பயணித்து காஷ்மீர் சென்றடைய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை தனது 100வது நாளை நிறைவு செய்தது.
இதனையடுத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 108வது நாளில் யாத்திரை டெல்லியில் நுழைந்திருக்கிறது. தற்போதுவரை சுமார் 9 மாநிலங்கள் 46 மாவட்டங்கள் என மொத்தம் 3,000 கி.மீ தொலைவை யாத்திரை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

விமர்சனம்
இவ்வாறு இருக்கையில் இந்த யாத்திரையில் பங்கேற்றிருக்கும் ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியினர் ராமருடன் ஒப்பிட்டுள்ளதாக புதிய சர்ச்சை மேலெழுந்திருக்கிறது. அதாவது நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்த சல்மான் குர்ஷித், "நாங்கள் எல்லோரும் உடலுக்கு வெப்பமூட்டும் உடையை அணிந்துகொண்டு யாத்திரையில் பங்கேற்றிருக்கும் நிலையில் ராகுல் காந்தி மட்டும் ஒரேயொரு டீ-சர்ட்டுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளார். ஒரு துறவியை போல அவர் தனது கவனம் முழுவதையும் நடைப்பயணத்தின் மீது குவித்து வைத்திருக்கிறார்.

ராமரின் காலணிகள்
ராமரின் பாதுகைகள் (காலணி) வெகு தூரம் பயணித்திருக்கிறது. சில நேரங்களில் அது அவரை அடைய முடியாதபோது இந்த தேசம் அந்த பாதுகைகளை கொண்டு தனது பயணத்தை தொடர்கிறது. அதேபோல தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு இந்த பாதுகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ராமரும் பின்னால் வருவார்" என்று கூறியிருந்தார். இந்த கருத்து பாஜக தலைவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. "இதே காங்கிரஸ்தான் ஒரு காலத்தில் ராமரை கற்பனை உருவம் என்று சொல்லிக்கொண்டிருந்தது. தற்போது ராமருடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு அவரை திருப்திப்படுத்த முயன்று வருகின்றனர்" என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சித்திருந்தார்.

ராமரின் பாதை
இதனையடுத்து சல்மான் குர்ஷித் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தான் ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிடவில்லை என்றும், பாஜக ராவணனின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது காங்கிரஸ் அதற்கு மாறாக ராமரின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கடவுளை யாராலும் மாற்ற முடியாது. ராகுல் காந்தில் ராமர் கிடையாது. ஆனால் அவர் காட்டிய பாதையில் இவர் பயணிப்பதாக சொன்னால் ஏன் அவர்கள் கோபம் கொள்கின்றனர்? ராகுல் காந்திக்கு அதற்கு உரிமையில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்" என விளக்கமளித்துள்ளார்.

யாத்திரை
முன்னதாக சர்வதேச அளவில் கொரோனா தொற்று மீண்டும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கிய நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அதில் பாரத் ஜடோ யாத்திரையில் அதிக அளவில் கூட்டம் இருப்பதால் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சல்மான் குர்ஷித் என்ன நடந்தாலும் யாத்திரை பாதியில் நிறுத்தப்படாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications