விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்..காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம்.. டெல்லியில் 144 தடை!
டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Recommended Video
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து முன்தினம் திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகம், யங் இந்தியா அலுவலகம் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுலகம், சோனியா காந்தி வீடு ஆகியவை முன்பாக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதேபோல் நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டிருக்கும் போதே காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கியது. அதேபோல் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் பிற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை எனவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications