நீட் தேர்வு முறைகேடுகள்.. விடாத காங்கிரஸ்.. ஜூன் 21-ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 21-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் தொடங்கி ஏராளமான முறைகேடு புகார்கள் அடுத்தடுத்து குவிந்து கொண்டிருக்கின்றன. பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராகவும் செயல்பட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்திலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதியதாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
நீட் நுழைவுத் தேர்வில் 0.001% கூட அலட்சியம் காட்டக் கூடாது; அப்படி முறைகேடுகள் நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு ஏற்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதி வழங்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜூன் 21-ந் தேதி போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் நுழைவுத் தேர்வு முறையே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியே போராட்டங்களை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications