"128 கிமீ டூ ஜீரோ.." வெறும் 23 நொடிகளில்.. கோரமண்டல் ரயில் ஒட்டுநர் கடைசி நேரத்தில் என்ன செய்தார்
டெல்லி: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ள நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் எந்தளவுக்கு வேகமாக வந்தது மற்றும் ஜிபிஎஸ் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட ரயில் விபத்து உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் இந்தியாவில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு ரயில் விபத்தாக இது இருந்தது.
நேற்றிரவு 7 மணியளவில் இந்த ரயில் விபத்து நடந்த நிலையில், இது தொடர்பாக அடுத்தடுத்து வெளியான தகவல்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. உலகின் பல தலைவர்கள் இந்த ரயில் விபத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

விபத்து: அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) நேற்று வழக்கம் போல நேற்றைய தினம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மாலை 3.20 மணிக்குக் கிளம்பியுள்ளது. தினரசி இயக்கப்படும் இந்த ரயிலில் எப்போதும் போல நேற்றைய தினமும் கூட்டம் அதிகமாகவே இருந்துள்ளது. வழக்கம் போலவே திட்டமிட்டபடி ரயில் பாலசோர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து கிளம்பி 30 நிமிடங்களில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் படையினரும் மாநில தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர். காட்டுப் பகுதி, இரவு நேரம் என்று பல்வேறு சிக்கல்கள் இருந்த போதிலும் அதையும் தாண்டி மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கே விரைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அருகே இருந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உயிரிழப்பு: இதுவரை இந்த விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். விடிய விடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மதியம் தான் அவை முழுமையாக நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இப்போது அங்கே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பயணிகள் இதில் பயணித்தனர் என்பது குறித்த துல்லிய தகவல் இல்லை. அதேநேரம் தமிழ்நாடு அரசு தரப்பில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர் தலைமையிலான குழுக்கள் அங்கே விரைந்துள்ளன.

இந்த கொடூர விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இருப்பினும், கோரமண்டல் எக்ஸிரஸுக்கு சிக்னல் தரப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அது லூப் டிராக்கில் செல்லவே அங்கே இருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதியுள்ளது. இது உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும், சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் ரயில் என்ஜின் இருப்பது இதையே காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்,
ஜிபிஎஸ் தகவல்: பொதுவாகவே இந்த ரயில் இந்தியாவில் இருக்கும் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். இதற்கிடையே கோரமண்டல் ரயிலின் ஜிபிஎஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நேற்றைய தினம் இந்த ரயில் 6.55 மணியளவில் சுமார் 128 கிமீ வேகத்தில் படுவேகமாக சென்றுள்ளது. அப்போது தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி 6.55 மணி 28 நொடிகளில் அதன் வேகம் 128 கிமீ ஆக இருந்துள்ளது. அடுத்த 23 நொடிகளில் அதன் வேகம் கிடுகிடுவென குறைந்து ஜீரோவுக்கு வந்துவிட்டது. அதாவது 23 நொடிகளில் அது 128 கிமீ-இல் இருந்து ஜீரோவுக்கு வந்துள்ளது. ரயில் ஒட்டுநர் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தியுள்ளதையே இது காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
128 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் 23 நொடிகளில் ஜீரோவுக்கு வருகிறது என்றால் உள்ளே இருந்த பயணிகள் என்ன மாதிரியான ஒன்றை உள்ளே அனுபவித்திருப்பார்கள் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications