தீவிரமடையும் கொரோனா..மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை..புது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா?
டெல்லி: சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. புதிய கட்டுப்பாடுகள் குறித்த குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவலால் உஷாராகியுள்ள மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், ஒவ்வொரு மாநில அரசுகளும் தனித்தனியாக தங்கள் மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், கட்டுப்பாடுகளையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையாடும் வைரஸ்
கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், அங்கு பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று மனிதர்களை வேட்டையாடி வருகிறது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும், 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருவதாக சர்வதேச புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா 'ஹை அலர்ட்'
சீனாவின் இந்த நிலைமை மிகச் சமீபக்காலமாகதான் உலக நாடுகளுக்கு தெரியவந்தது. பின்னர், மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழலில், சீனாவுக்கு மிக அருகே அமைந்திருக்கும் நாடு என்பதால், இந்தியாவும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களை உச்சக்கட்ட தயார்நிலையில் வைத்திருக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிரடி உத்தரவுகள்
மேலும், கொரானோ பரிசோதனைகளை அதிகரிக்குமாறும், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்துமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், திருமண நிகழ்ச்சிகளை தவிர்கக வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் வருமா?
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளார். ஏற்கனவே மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது. ஆரம்பத்திலேயே, உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதற்காக சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எடுத்துரைப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications