சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு ஹு ஒப்புதல்!
டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓமிக்ரான் வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 11 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. இப்படி கொரோனா உருமாறி வந்து கொண்டிருக்க அதற்கு ஏற்ப தடுப்பூசிகளும் வர வேண்டியது உள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக செயல்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது.இதேபோல் அமெரிக்காவில் Novavax தடுப்பூசியை இந்தியாவில் கோவோவாக்ஸ்(Kovovax) என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசி குழந்தைகளுக்கானது ஆகும்.
இந்த நிலையில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு(WHO) அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' உலக சுகாதார அமைப்பு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல். கோவோவாக்ஸ் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கொண்டுள்ளது. நோவோவாக்ஸ், உலக சுகாதார அமைப்பு, கவிசேத், கவி, கேட்ஸ் பவுண்டேசன் ஆகிய அனைவருக்கும் நன்றி என்று ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவில் உள்ள DCGI சீரம் இன்ஸ்டிடியூட் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசி சோதனை இந்தியாவில் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களில் இந்த தடுப்பூசிக்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆதார் பூனவல்லா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
நாட்டில் இந்த தடுப்பூசியை அவசரகாலமாக பயன்படுத்த சீரம் நிறுவனம் ஏற்கனவே அனுமதி கோரியுள்ளது,. ஆனால் இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவாக்ஸ் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications