வேதம், உபநிடதம்.. அரசியல் சாசன நாள் கருத்துரைக்கு இதுதான் 'டாப்பிக்'.. கொதித்தெழுந்த மதுரை எம்பி!
டெல்லி: வரும் 26ம் தேதி 'அரசியல் சாசன நாள்' கடைப்பிடிக்கப்படும் நிலையில், நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் 'கிராம பாரம்பரிய பஞ்சாயத்து' எனும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதனை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக எதிர்த்ததுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு கைப்பற்றியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் பலர் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து தங்களது கண்டனத்தையும் பகிர்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் 'அரசியல் சாசன நாள்' விழாவில் இந்த முறை இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் சார்பில்(ICHR) வழங்கப்பட்டுள்ள 'கருத்துக்கள்' பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நவம்பர் 26
நாட்டின் ஜனநாயகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதி 'அரசியல் சாசன நாள்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்லூரிகளில் 'முன்னுதாரண மன்னர்' மற்றும் 'கிராம பாரம்பரிய பஞ்சாயத்து' உள்ளிட்ட தலைப்புகளில் கீழ் உரைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. மேலும், சில கருத்துக்களை இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) தொகுத்து வழங்கியுள்ளது. இந்த தலைப்பும், 'Concept Note by ICHR' என ஆய்வு கழகம் தொகுத்து வழங்கியுள்ள கருத்துக்களும்தான் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

சாராம்சம்
ICHR தொகுத்து வழங்கியுள் கருத்துகளின் சாரம்சம் பின்வருமாறு, "பழங்காலத்திலிருந்தே உலகமெங்கும் இந்தியர்கள் வசித்து வந்துள்ளனர். இதனால் பாரதம் குறித்து நாம் பெருமை பட வேண்டும். பாரதம் குறித்த எண்ணம் போற்றப்பட வேண்டும். அப்போதிலிருந்தே நாம் ஜனநாயகத்தை பின்பற்றி வந்திருக்கிறோம். பாரதத்திலிருந்துதான் ஜனநாயகம் எனும் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேத காலத்திலிருந்தே 'ஜனபதம்' மற்றும் 'ராஜ்யம்' என இரண்டு வகையான அமைப்புகள் இருந்தன. இதிலிருந்துதான் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அமைப்புகள் உருவாகின. கிராம பஞ்சாயத்துகள் அந்நிய படையெடுப்பிலிருந்து நமது பண்பாட்டை காப்பாற்ற உதவின.

பாரதம்.. பழங்கால பஞ்சாயத்து முறை
இதனால்தான் நமது பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவை இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல அமைப்புகளை கொண்ட பாரதத்தில் ஜனநாயகம் என்பது ஏறத்தாழ கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இருந்து வருகிறது என்பதற்கு தற்போது சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல 'வேத இலக்கியம்' பிரபஞ்சத்தின் இருப்பு குறித்து பேசுகிறது. அனைத்து உயிரினங்களுக்கான அடிப்படை ஒற்றுமை குறித்து 'உபநிடதங்கள்' வலியுறுத்துகின்றன. 'பகவத்கீதை' அறிவையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் பாரதம், பகவத்கீதை, பழங்கால பஞ்சாயத்து முறைகள், வேதம், உபநிடதங்கள் உள்ளிட்டவை ஏன் இடம்பெற்றிருக்கிறது என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

மதுரை எம்.பி
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "நவ 26; அரசியல் சாசன நாள். "முன்னுதாரண மன்னர்" - "கிராம பாரம்பரிய பஞ்சாயத்து" என்ற உள்ளடக்கத்தில் கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்த யு.ஜி.சி உத்தரவு. அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? இது கான்ஸ்டிடியூசன் நாளா? கட்டப் பஞ்சாயத்து நாளா? ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். யுஜிசியின் இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications