"கார்டு மேல 16 நம்பர்".. 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகள்.. சைபர் குற்றவாளிகளுக்கு செக் வைத்த சிபிஐ
டெல்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிக் கிளைகளில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகளை தொடங்கி சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி வந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்யும் பணத்தை இந்த கணக்குகளின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் அதில் எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்பதை கண்டறியவும் ஒரு ஆராய்ச்சியாளர் கூட்டமே உள்ளது. ஆடு திருட்டு, கோழி திருட்டு, சைக்கிள் திருட்டில் இருந்து வளர்ச்சியடைந்து இப்போது சைபர் திருட்டில் வந்து நிற்கிறது. கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லுங்க, வங்கியில் இருந்து அழைக்கிறோம், உங்க பேரில் போதைப் பொருள் அடங்கிய பார்சல் வந்திருக்கிறது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை என்று நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த சைபர் குற்றங்கள், திருட்டு, மோசடி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் தொடர்ந்து பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் கிளைகளில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகளை தொடங்கி சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி வந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்யும் பணத்தை இந்த கணக்குகளின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற திறக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் கேஒய்சி விதிகள் பின்பற்றப்படாமல் இருந்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொண்டும் வங்கியில் அக்கவுண்டை திறந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற போலி வங்கிக் கணக்குகளை திறக்க இடைத்தரகர்கள், இ-மித்ரா முகவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சில வங்கி அதிகாரிகளே இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடிகளுக்காக திறக்கப்பட்டும் இந்த வங்கிக் கணக்குகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மோசடி சம்பவங்களில் வரும் பணத்தை, தேவைப்படும் வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. பின்னர், தொடங்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கை மூடிவிடுகின்றனர். இதனால், மோசடி சம்பவங்கள் குறித்தும், குற்றவாளியை கண்டுபிடிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அண்மையில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது இடைத்தரகர்கள், வக்கிக் கணக்குதாரர்கள், வங்கி ஊழியர்கள், ஏஜெண்டுகள் ஆகியோர் சிபிஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள், பணம் பரிமாற்றம் செய்யப்படும் விவரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த விசாரணையில் நாடு முழுவதும் 700 வங்கிக் கிளைகளில் 8.5 லட்சம் போலிக் கணக்குகளை சைபர் குற்றவாளிகள் தொடங்கி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications