டெல்லி சட்டசபை தேர்தல்.. 300 யூனிட் மின்சாரம், ரேஷன் பொருள் இலவசம்.. வாக்குறுதிகளை வீசிய காங்கிரஸ்!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் வெற்றிபெற்றால் 300 யூனிட் மின்சாரம், ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிருக்கு ரூ.2,500 உதவித் தொகை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 70 தொகுதிகளை கொண்டு டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்.5ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் பிப்.8ஆம் தேதி பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்ட நிலையில், மதுபான முறைகேடு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் சிறையில் இருந்து வெளி வந்த அவர், பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக அதிஷ் செயல்பட்டு வருகிறார். இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என்று தனித்தனியே போட்டியிடுகின்றன.
ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிப்பு முடிவடைந்து தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே ஜனவரி 6ஆம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்பின் ஜனவரி 12ஆம் தேதி படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.8,500 உதவித் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உடனிருந்தார். இதன்பின் ரேவந்த் ரெட்டி பேசுகையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு அளிக்கப்படும். அதேபோல் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கும்.
நாங்கள் ஆட்சியமைத்தால் இந்த 5 வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் ஏற்கனவே தமிழ்நாடு தொடங்கி பல்வேறு மாநிலங்களிலும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் பொருட்கள் இலவசம் என்ற அறிவிப்பு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications