திடீரென டெல்லி எல்லையில் குவிக்கப்பட்ட போலீஸ்.. ஒவ்வொரு காரிலும் தீவிர சோதனை.. என்ன தான் நடக்கிறது?
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குப் போய் இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எல்லை முழுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் நிலையங்களிலும் அதிகாரிகள் ஆய்வுப் பணிகளில் இறங்கினர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலங்களில் காற்று மாசு மிக மோசமான ஒரு பிரச்சனையாக மாறிவிடும். கட்டுமான பணிகளில் எழும் தூசிகள், வாகன மாசு, அண்டை மாவட்ட விவசாயிகளின் விவசாயக் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் டெல்லி காற்று மாசு காரணமாகத் திண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது.

நிலைமை மோசம்
இந்தாண்டு அங்கு நிலைமை கிட்டத்தட்ட கையை மீறிச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல பகுதிகளில் காற்றின் தரம் ஆபத்தான நிலைக்குப் போய்விட்டது. பொதுமக்கள் மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல முடியாத சூழல் இருக்கிறது. ஏர் பியூரிபையர்கள் கிட்டத்தட்ட அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. வெளியே போனால் ஆளைக் காலி செய்யும் அளவுக்கு அங்குக் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த அங்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டெல்லி போலீஸ்
குறிப்பாக பிஎஸ்-VI தரத்திற்கு முந்தைய வாகனங்களுக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி நுழைவாயில்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லிக்கு நுழையும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அது நிலையைச் சோதனை செய்தனர். பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்களால் காற்று மாசு மிக அதிகமாக ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 580 போலீசார் 126 சோதனைச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அத்தியாவசியத் தேவைகளுக்கு வரும் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "டெல்லியில் பதிவு செய்யப்படாத பழைய வாகனங்களை நாங்கள் நிறுத்துகிறோம். அவர்களுக்கு டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை. ஒருவேளை டெல்லியில் டெல்லியில் பதிவு செய்யப்படாத பழைய வாகனங்களை யாராவது இயக்கினால் அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். இதுவரை இல்லாத வகையில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கிறோம்" என்று கூறினர்.
பெட்ரோல் இல்லை
அதேபோல காற்று மாசு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. காற்று மாசு சான்றிதழ் என்பது இந்தியா முழுக்க அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலானோர் காற்று மாசு சான்றிதழை வைத்திருப்பதில்லை. இதற்கிடையே டெல்லி அரசு காற்று மாசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே எரிபொருள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பல வாகனங்கள் காற்று மாசு சான்றிதழ் இல்லாமல் எரிபொருள் நிரம்ப முடியாமல் அங்குத் திண்டாடி வருகிறது. இருப்பினும், காற்று மாசு மோசமாக இருப்பதால் இந்த தடை தொடரும் என்றே தெரிகிறது.
போராட்டம்
அதேநேரம் இந்தத் தடை சிஎன்ஜி, மின்சார வாகனங்கள், பொதுப் போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள்/சேவைகள் வாகனங்களுக்குப் பொருந்தாது. அவர்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. அதேபோல கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கு போராட்டங்களும் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications