பாஜகவில் களை எடுப்பை தொடங்கும் ஆர்எஸ்எஸ்? கர்நாடகாவில் காட்டிய அதிரடி நடவடிக்கையால் அதிரும் டெல்லி!
டெல்லி: தமது இயக்கத்தின் அரசியல் பிரிவான பாஜகவில், தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். களை எடுப்பை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா பாஜகவில் முக்கிய பதவியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை திரும்ப அழைத்துக் கொண்டது பாஜக டெல்லி மேலிடத்தையும் அதிர வைத்திருக்கிறதாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் அன்றைய ஜனசங்கம் இன்றைய பாஜகவின் தாய் அமைப்பு. பாஜகவை வழிநடத்தி வருவது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். பாஜகவின் முக்கிய பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்களை அனுப்புவதும் பின்னர் திரும்பப் பெறுவதும் அவ்வப்போது நடைபெறக் கூடியதுதான். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் செயல்பாடுகளை பாஜக வெளிப்படையாகவே ஆய்வு செய்திருந்தது.

ஜேபி நட்டா பேச்சு: இந்த நிலையில் தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் பாஜக வேறு.. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேறு பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசியிருந்தார். அத்துடன் பாஜக சிறிய கட்சியாக இருந்ததால் ஆர்.எஸ்.எஸ்.-ன் உதவியை நாடினோம். இப்போது பாஜக தனித்தே செயல்படக் கூடிய அளவுக்கு வலிமையான கட்சியாக இருக்கிறது எனவும் ஜேபி நட்டா பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
உத்தவ் தாக்கரே பற்ற வைத்த நெருப்பு: மத்தியில் பாஜக மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே தடை செய்தாலும் தடை செய்வார்கள் என சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் பீதியை கிளப்பி இருந்தார். அத்துடன் பாஜகவில் 75 வயதுக்கு மேல் பதவிகள் வகிக்க தடை இருந்து வருகிறது. இதனால் பிரதமராக மோடி எத்தனை ஆண்டுகள் பதவி வகிப்பார்? என்கிற கேள்வியும் விவாதமும் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்ன முடிவு எடுக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருந்து வருகிறது.
கர்நாடகா ராஜேஷ்: இந்த நிலையில் கர்நாடகா பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். களை எடுப்பை தொடங்கிவிட்டதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பாஜக கோட்டையாக இருக்கும் தட்சிண கன்னடாவில் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜிவி. கர்நாடகா மாநில பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவியில் நியமிக்கப்பட்டார். இவர்தான் நளின் கட்டீலை கர்நாடகா பாஜகவின் தலைவராகவும் நியமித்தவர். பாஜகவின் தேசிய செயலாளர் பிஎல் சந்தோஷுக்கு மிக நெருக்கமான 37 வயது இளைஞர் ராஜேஷ்.
கர்நாடகாவில் களை எடுப்பு: தற்போது ராஜேஷை கர்நாடகா பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஆர்.எஸ்.எஸ். தமது இயக்கத்துக்கு திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இன்னமும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகா பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் களை எடுப்பை ஏன் தொடங்கியது? என்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
என்ன காரணம்?: ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டின் கீழ்தான் பாஜக இருக்கிறது என ஜேபி நட்டா போன்றவர்களுக்கு உணர்த்தவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? அல்ல்து நாடு தழுவிய அளவில் பாஜகவை ஒட்டுமொத்தமாக தமது பிடியில் வைத்திருக்க முதல் மாநிலமாக கர்நாடகாவில் களை எடுப்பை தொடங்கியதா ஆர்.எஸ்.எஸ்.? அல்லது உத்தவ் தாக்கரே எச்சரித்தது போல ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதே புதிய பாஜக அரசு கை வைக்கும் அதாவது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பாஜக அரசு தடை செய்யுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடா? என்பதுதான் விவாதங்களாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications