டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்! பயங்கரவாதி டாக்டர் உமர் முகமதுவின் வீட்டை தரைமட்டமாக்கிய போலீஸ்!
டெல்லி: டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மருத்துவர் உமர் முகமது நபியின் ஜம்மு காஷ்மீர் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டெல்லியில் கடந்த 10ஆம் தேதி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், 27 பேர் காயமடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவர் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த காரில் அவர் சென்று வந்த வழித்தடங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டன. இவர்தான் வெடிப்பை செய்திருப்பார் என போலீஸார் உறுதியாக நம்பினர்.
எனினும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் உறுதியானது. உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்தவர். அங்குள்ள தாய், சகோதரியிடம் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என சொல்லப்படும் பாகங்களின் மாதிரிகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
இந்த பரிசோதனை இரண்டும் ஒத்து போனது. இதையடுத்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமரின் உடல் பாகங்கள்தான் என தெரியவந்தது. இதனால் அவர்தான் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார் என்பது தெரியவந்தது. அவர் ஒரு பயங்கரவாதி என்பதும் உறுதியானது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்பு சம்பவத்தை 4 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது போலீஸாருக்கு தெரியவந்தது. இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன், அதீல் அகமது ராதர் ஆகியோர் 20 லட்ச ரூபாய் திரட்டியுள்ளனர்.
இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் ரூ 3 லட்சம் மதிப்புக்கு 3 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக் கடைகளில் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. குருகிராம், நுகு உள்ளிட்ட பகுதிகளில் இவை வாங்கப்பட்டதாம். பணம் விவகாரத்தில் உமருக்கும் முசமிலுக்கும் இடையே தகராறு இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் அமைந்துள்ள உமர் முகமதுவின் வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நள்ளிரவு புல்டோசரை பயன்படுத்தி வீட்டை இடித்தனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications