ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் பலி.. வெகுண்டெழுந்த மாணவர்கள்.. டெல்லியில் தீவிரம் அடையும் போராட்டம்
டெல்லி: டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்து தரை தளத்தில் படித்துக் கொண்டு இருந்த இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என மூன்று பேர் பலியான சம்பவம் தலைநகரை உலுகியுள்ளது. இந்த சம்பவத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அங்கே தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க.. மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரை தளத்தில் நேற்று திடீரென வெள்ள நீர் புகுந்தது.

பயிற்சி மையத்தின் தரைதளத்தில் தான், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான 80 சதவீத புத்தகங்கள் இருந்து இருக்கின்றன. இதனால், நேற்று இரவு 7 மணியளவில் இந்த நூலகத்தில் மாணவ - மாணவிகள் பலர் இருந்தனர். அப்போது பலத்த மழை காரணமாக பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களால் வெளியே வர முடியவில்லை. மாணவ மாணவிகள் தரைதளத்திற்குள் சிக்கி கொண்ட நிலையில், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து வந்தனர். வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் கொண்டு வெளியேற்றினர். பல மணி நேரம் இந்த பணி நீடித்தது.
இறுதியில் தரைதளத்தில் சிக்கிய 2 மணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பலியானவர்கள் தானியா சோனி (வயது 25), ஸ்ரேயா யாதவ் ( வயது 25), நெவீன் தல்வின் (28) என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பயிற்சி மையங்களில் தரை தளத்தில் அறைகள் இருந்தால் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவ - மாணவிகள் பலியானதை கண்டித்து பயிற்சி மையம் முன்பு மாணவ - மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. மாணவ - மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு பயிற்சி மையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் என்ன நடக்கிறது என்ற கள நிலவரத்தை அறிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாக 'ஒன் இந்தியா' சென்று மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டது. மாணவர்கள் பலரும் டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகவும் தேசிய ஊடகங்கள் கூட இதை பெரிது படுத்தவில்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பயிற்சி மையங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து, மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். மாணவர்கள் உயிரிழப்புக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பிய படி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோல் பாக் மெட்ரோ நிலையத்திற்கு அடுத்தாற்போல் உள்ள சாலையை பிளாக் செய்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications