திடீர் பரபரப்பு! டெல்லியில் இருந்து தோஹா கிளம்பிய விமானம்.. திடீரென பாகிஸ்தானில் தரையிறங்கியது
டெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாக். நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட QR579 என்ற கத்தார் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தோஹாவுக்கு செல்ல இருந்தது.
இருப்பினும், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கத்தார் விமானம் தொடர்பாக மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில், "QR579 - டெல்லி-தோஹா, கராச்சிக்கு திருப்பி விடப்பட்டதன் நிலை என்ன? இது தொடர்பாகப் பயணிகளுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உணவு அல்லது தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தரவில்லை" என ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல கராச்சியில் தரையிறங்கி உள்ள கத்தார் விமானத்தில் இருக்கும் பயணி ஒருவர் தனது ட்விட்டரில், "இங்கு கராச்சியில் நாங்கள் காத்திருக்கிறோம். இங்குள்ள பலரும் தோஹாவில் இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால் கராச்சியில் இருந்து விமானம் எப்போது புறப்படும் என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் இன்று அதிகாலை 3:50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும் காலை 5:30 மணிக்கு கராச்சியில் இந்த விமானம் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சியில் காத்திருக்கும் விமானத்தில் உள்ள பயணி ஒருவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "விமானம் தரையிறங்கியதும், நீண்ட நேரம் நாங்கள் விமானத்திலேயே காத்திருந்தோம். அதன் பின்னரே விமானத்தில் இருந்து வெளியேற எங்களை அனுமதித்தனர்.
இப்போது காலை 9 மணி ஆகிறது. விமானம் எப்போது புறப்படும் என்று அவர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. இங்கே பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட காத்திருக்கின்றனர். மேலும், பலர் தோஹாவில் இருந்து இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications