டெல்லி தேர்தல் ரிசல்ட்: கடந்த 3 தேர்தல்களில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? விவரம்
டெல்லி: 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 3 தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வென்ற தொகுதிகள் எத்தனை என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் கடுமையாக அடி வாங்கியிருக்கின்றன. இது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

2013 டெல்லி சட்டமன்ற தேர்தல்:
அதுவரை ஷீலா தீட்சித் தலைமையில் ஆட்சியமைத்திருந்த காங்கிரஸுக்கு, பாஜகவும், ஆம் ஆத்மியும் இருதலைக்கொள்ளியாய் வளர்ந்து சிக்கல் கொடுத்தது 2013ம் ஆண்டு தேர்தலில்தான். தேசிய அளவில் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனம் இருந்த காலம் அது. மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்திக்காதது, ஊழல் குற்றச்சாட்டு, நஷ்டத்தில் இயங்கும் பொது துறை, வேகமாக நுழையும் தனியார் முதலீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் போதிய ஊதியம் இல்லாதது போன்றவை இந்த அதிருப்திக்கு காரணமாக இருந்தது.
இதனை டெல்லி தேர்தல் மிகச்சரியாக எதிரொலித்தது. தேர்தல்களை பொறுத்தவரை எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால், ஆளும் கட்சி மீது அதிருப்தி என்று அர்த்தம். குறைவாக பதிவானால் மக்கள் பெரிய அளவுக்கு மாற்றங்களை விரும்பவில்லை என்று அர்த்தம். 2013 டெல்லி தேர்தலில் 66.02% வாக்குகள் பதிவாகின. இது முந்தைய தேர்தலை விட 8.42% அதிகம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 43 தொகுதிகளுடன் கடந்த முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கு வெறும் 8 தொகுதிகள்தான் கிடைத்தது. 36 தொகுதிகளை வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். மறுபுறம் பாஜக 35 பிடித்து ஆட்சியை அமைக்க ரெடியானது. ஆனால் ஆம் ஆத்மி 28 தொகுதிகளை கைப்பற்றி தொங்கு சட்டமன்றத்தை உருவாக்கியது. பாஜகவால் எதையும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி அக்கட்சி நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை என்று விலகிக்கொண்டது. இதனையடுத்து, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி.
2015 சட்டமன்ற தேர்தல்:
என்னதான் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்தாலும், அக்கட்சியால் நினைத்ததை எல்லாம் செய்ய முடியவில்லை. குறிப்பாக 'ஜன் லோக்பால் மசோதாவை' கொண்டுவர முடியவில்லை. ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை வெளிப்படையாக தண்டிக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதை பேசிதான் ஆம் ஆத்மி 2013 தேர்தலில் 28 தொகுதிகளை வென்றிருந்தது. எனவே ஜன் லோக்பால் மசோதாவை சட்டமாக்க முடியவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
49 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த அவர் ராஜினாமா செய்யப்பட்டது மக்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது. 2015 பிப்.7ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அடுத்த 2 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரிய மேஜிக்கை ஆம் ஆத்மி நடத்தி காட்டியது. அதாவது மொத்தம் இருந்த 70 தொகுதிகளில் 67-ஐ அக்கட்சி கைப்பற்றியது. பாஜகவுக்கு வெறும் 3தான் கிடைத்தது. காங்கிரஸ் ஒன்னும் இல்லாமல் போனது.
அப்புறம் என்ன? கெஜ்ரிவால் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். வாக்கு விகிதம் அடிப்படையில் இந்த தேர்தலில் பெரியதாக அடிவாங்கியது காங்கிரஸ்தான். அக்கட்சியின் வாக்குகள் 14.9% குறைந்தன. ஆனால் பாஜகவின் வாக்குகள் முந்தைய தேர்தலை விட வெறும் 0.8% மட்டுமே குறைந்தது.
2020 சட்டமன் தேர்தல்:
இந்த தேர்தலிலும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மக்கள் மனத்தில் கேள்விகளாக இருந்துக்கொண்டே இருந்தது. கடந்த முறை 67 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மி இந்த முறை 5 தொகுதிகள் குறைவாக 62ல் வெற்றி பெற்றது. வாக்குகள் பெரிய அளவுக்கு சரியவில்லை. வெறும் 0.71 சதவிகிதம்தான் குறைந்தது.
மறுபுறம் பாஜக 5 தொகுதிகளை கூடுதலாக வென்று 8 தொகுதிகளில் கோலோச்சியது. ஆனால் வாக்கு சதவிகிதம் 6.21% என உயர்ந்தது. ஆக பாஜக vs ஆம் ஆத்மி போட்டியில் காணாமல் போனது காங்கிரஸ்தான்.












Click it and Unblock the Notifications