16 வயது மைனர் சிறுமிக்கு மது கொடுத்து.. ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்! டாக்ஸி ஓட்டுநர்கள் கைது
டெல்லி: தலைநகர் டெல்லியில் மைனர் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாகக் கூறப்படுகிறது
அதிலும் மைனர் சிறுமிகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்தில் சமீபத்தில் சிறுமிக்கு காரில் நடந்த கூட்டு பலாத்காரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லி
இந்தச் சூழலில் அதேபோன்ற ஒரு பயங்கர சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. காரில் வைத்து 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை 8ஆம் தேதி அதிகாலை நேரத்தில் டெல்லி மருத்துவமனையில் இருந்து ஒரு சிறுமியின் தந்தை போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். தனது மகளை மூன்று பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.

புகார்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி மனோஜ் கூறுகையில், "ஜூலை 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தனது மகள் மூன்று நபர்களுடன் காரில் வெளியே சென்றதாகச் சிறுமியின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஜூலை 7ஆம் தேதி காலை 7 மணியளவில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது தான் அந்தச் சிறுமி தனது பெற்றோரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி உள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்" என்றார்.

16 வயது சிறுமி
அந்த சிறுமிக்கு 16 வயதே ஆகி இருந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூவரில் ஒருவர், அந்த சிறுமியின் நண்பர் ஆவர். அந்த நண்பர் அழைத்ததால் கடந்த ஜூலை 6இல் அச்சிறுமி வெளியே சென்றுள்ளார். அந்த நண்பருடன் மேலும் இருவரும் காரில் வந்துள்ளனர். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கார்
சிறுமியும் மூன்று பேரும் வேகன்ஆர் காரில் வெளியே சென்று உள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் மதுவை வாங்கியுள்ளனர். சிறுமி உடன் சேர்ந்து நான்கு பேரும் மது அருந்தினர். பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்குக் காரை ஓட்டிச் சென்று உள்ளனர். அப்போது தான் அவர்கள் சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது

கைது
அச்சிறுமி அளித்த தகவலின் பெயரில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் முகமது ஆரிப் (23), மனோஜ் குமார் (25), ரூபேஷ் குமார் (35) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் மூன்று பேருமே தனியார் டாக்சி டிரைவர்கள் ஆவர். இந்தச் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications