முற்றும் மோதல்.. ஆம்ஆத்மியை விடாத டெல்லி ஆளுநர்.. பஸ் கொள்முதல் குறித்து சிபிஐ விசாரிக்க ஒப்புதல்
டெல்லி: டெல்லி அரசு சார்பில் 1000 தாழ்தள சொகுசு பஸ் வாங்கும் விவகாரத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் டெல்லி ஆம்ஆத்மி அரசுக்கு இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக ஆம்ஆத்மி கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் அடிக்கடி பாஜக, ஆம்ஆத்மி தலைவர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

புதிய மதுபான கொள்கை
கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அதன்பிறகு கடந்த ஜூலையில் திரும்ப பெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா சரமாரியாக விமர்சனம் செய்தார். இதன் தொடர்ச்சியாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆகஸ்ட் 19ல் சோதனைகள் நடத்தப்பட்டது.

புதிய குற்றச்சாட்டு
இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லி போக்குவரத்து கழகத்தின் வாயிலாக அரசு சார்பில் 1000 பஸ்கள் வாங்கும் விவகாரத்தல் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு ஜூன் மாதம் புகார் செய்தது். இதுபற்றி விசாரித்து அறிக்கை வழங்க தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு ஆளுநர் வினய்குமார் சக்சேனா உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்
இதுபற்றி விசாரணை நடத்திய தலைமை செயலாளர் நரேஷ் குமார் சிபிஐயிடம் ஒப்படைக்கலாம் எனும் வகையில் பரிந்துரை செய்தார். மேலும் பொதுநிதி விதிகளில் மீறல்கள் நடந்துள்ளன. டெண்டர் விஷயத்தில் உள்ள முரண்பாடுகளை மறைக்க டெல்லி மாநகர போக்குவரத்து கழக நிர்வாக ஆலோசகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பன போன்ற விஷயங்கள் இருந்தன. இதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்நோக்கம் உள்ளது
இதற்கிடையே தான் ஆளுநர் வினய்குமார் சக்சேனாவின் விசாரணையில் உள்நோக்கம் உள்ளது என டெல்லி அரசு விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி அரசு "டெல்லி மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பஸ்கள் வாங்கவே இல்லை. டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு அதிகம் படித்த ஆளுநர் தேவை. இவர் பல கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இதனால் கவனத்தை திசை திருப்ப, அவர் இதுபோன்ற விசாரணைகளை செய்கிறார். அனைத்து விசாரணைகளும் இதுவரை எந்த பலனும் இல்லை. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் சதேந்தர் ஜெயின் ஆகியோர் மீது தொடர்ந்து புகார் அளித்த நிலையில் தற்போது 4வது முறையாக புகார் அளித்துள்ளார்.

ரூ.1,400 கோடி ஊழல்
கைத்தறி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் தலைவராக வினய் குமார் சக்சேனா இருந்தார். அப்போது பதவியை தவறாக பயன்படுத்தி மும்பையில் கைத்தறி தொடர்பானஒப்பந்தத்தை மகளுக்கு வழங்கினார். ரூ.1,400 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் முதலில் பதிலளிக்க வேண்டும்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications