குழந்தைகளுக்கு பாதிப்பு.. ஆபத்தான பாலை தான் பொதுமக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்! டெல்லி ஐகோர்ட்
டெல்லி: பால் உற்பத்தியில் தடை செய்யப்பட்ட கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இது பாலை பாதுகாப்பற்றதாக மாற்றுவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பால் பண்ணைகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது தான் பொதுமக்கள் அருந்தும் பால் பொருட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆக்ஸிடாசின் போன்ற கெமிக்கல்கள் தரப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லி ஐகோர்ட்: டெல்லி அரசின் கால்நடை பராமரிப்புத் துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகியவை வழங்கிய கட்டுப்பாடுகளை இந்த பால் பண்ணைகள் பின்பற்றவில்லை என்றும் பல பால் பண்ணைகளுக்கு உரிமம் கூட இல்லை என்றும் டெல்லி ஐகோர்ட் சாடியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், இந்த சிக்கல்களைச் சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வேன் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு இல்லை: இந்த விசாரணையின் போது டெல்லி ஐகோர்ட் சில முக்கிய கேள்விகளை எழுப்பியது. அதாவது நீதிபதிகள், "இந்த ஆக்ஸிடாசின் எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது. இதை எப்படி பேக்கேஜ் செய்து விற்பனை செய்கிறார்கள்? பிரச்சனைக்கான இந்த மூல காரணத்தை டெல்லி போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்ததா? போலீசாரால் இந்த விவகாரத்தில் எதையும் செய்ய முடியவில்லை என்றால் இதை சிபிஐயிடம் ஒப்படைக்கலாம்...
இந்த விவகாரம் நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவைப் பாதிக்கிறது. இது குழந்தைகளைப் பாதிக்கிறது. காவல்துறை இந்த விவகாரத்தில் கொஞ்சமாவது மெனக்கெட வேண்டும்" என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
உத்தரவு: தொடர்ந்து இந்திய உணவு தர நிர்ணய ஆணைய தலைவரிடம் சோதனைகளை அதிகரிக்குமாறு டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள், "சோதனை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக காஜிபூர் மற்றும் பால்ஸ்வா பகுதிகளில் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவான இனிப்பு கடைகளில் தான் இந்த இரு பகுதிகளில் உற்பத்தியான பாலை அதிகம் பயன்படுத்துவார்கள். எனவே, இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளையும் சோதனை செய்யுங்கள்" என்றார்.
மேலும், காசிபூர் மற்றும் பால்ஸ்வா பகுதிகளில் குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் அமைந்துள்ள பால்பண்ணைகளை மாற்றுவது தொடர்பாக நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இடமாற்றம் செய்ய போதிய நிலம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஓரிரு ஆண்டுகளில் அந்த குப்பைக் கிடங்குகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
குப்பைக் கிடங்கு: அதற்கு நீதிபதிகள், "குப்பைக் கிடங்கை அகற்ற இதுவரை நீங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அந்த ஏரியாவில் அங்கீகரிக்கப்பட்ட பால் பண்களை மட்டும் மட்டும் 9 இருக்கிறது.. இது தவிர அங்கீகரிக்கப்படாத பால் பண்ணைகளும் நிச்சயம் இருக்கும்.
கால்நடைகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.. தடை செய்யப்பட்ட ஆக்ஸிடாசினை கால்நடைகளுக்கு வழங்குகிறார்கள்.. உங்கள் (டெல்லி அரசு) அதிகாரிகள் அங்குச் சிலர் வேலை செய்வதாகச் சொல்லி சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர்கள் வேலை செய்வது போலத் தெரியவில்லை. உடனே உரிய நடவடிக்கை எடுங்கள்" என்று நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கை மே 27ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications