2018-ம் ஆண்டு அவதூறு வழக்கு: டெல்லி ஹைகோர்ட்டில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராவாரா?
டெல்லி: நீதிபதி முரளிதரை விமர்சித்த அவதூறு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பீமாகோரேகான் வழக்கில் 2018-ம் ஆண்டு சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விடுதலை செய்தது. மேலும் டெல்லியில் கைது செய்யப்பட்ட நவ்லகாவை புனே கொண்டு செல்ல அப்போது உத்தரவிட்ட நீதிபதியையும் கடுமையாக சாடினர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர், வினோத் கோயல். தற்போது ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கிறார் முரளிதர்.

கவுதம் நவ்லகா விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிபதி முரளிதர் வலதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் அக்னிஹோத்ரி, ஆனந்த் ரங்கநாதன், எஸ்.குருமூர்த்தி உள்ளிட்டோர் நீதிபதி முரளிதர் பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சித்திருந்தனர். இந்த கருத்துகள் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் மீது டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான அக்னிஹோத்ரி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால் ஆனந்த் ரங்கநாதன் மன்னிப்பு கோர மறுத்திருந்தார்.
இவ்வழக்கில் அக்னிஹோத்ரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. கடந்த மாதம் இவ்வழக்கு விசாரணையின் போது தமக்கு காய்ச்சல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என அக்னிஹோத்ரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 10-ந் தேதி அக்னிஹோத்ரி நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது/ இன்றைய வழக்கு விசாரணையின் போது அக்னிஹோத்ரி நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications