‛‛ED விசாரணைக்கு ஆஜராக முடியாது’’.. இன்றே தியானத்துக்கு செல்லும் கெஜ்ரிவால்.. நெருங்கிய கெடு
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டிசம்பர் 21ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் தான் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே தான் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கு ஆம்ஆத்மி தலைவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறது. அதாவது டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது. இருப்பினும் அதுபற்றிய புகார் பற்றி சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் குதித்தது. இதையடுத்து அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது பிப்ரவரி மாதம் 26ம் தேதி கைது செய்தது. மேலும் சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழக்கு தெடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து அவர் சிபிஐ விசாரணகை்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. நவம்பர் 2ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி அவர் விசாரணையை புறக்கணித்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. அதில் வரும் 21ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அமலாக்கத்துறை வழங்கிய காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த முறையும் அதாவது 2வது தடவையாக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாறாக அவர் இன்றே 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளாராம்.
அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் ஆண்டுதோறும் யோகா மற்றும் தியான பயிற்சிக்காக 10 நாள் ஓய்வில் இருப்பது உண்டு. அதன்படி இந்த ஆண்டு அவர் 10 நாள் தியானத்துக்காக இன்று புறப்பட்டு செல்ல உள்ளதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் அவர் திட்டமிட்டப்படி இந்த தியானத்துக்கு இன்று புறப்பட்டு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டபடி 10 நாள் தியானத்துக்காக இன்று புறப்பட்டு செல்ல உள்ளார்'' என்றார். இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணையை 2வது முறையாக புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications