கதவை திறந்த அடுத்த நொடி.. மளமளவென உள்ளே பரவிய விஷம்! அதிர்ந்த இளைஞர்.. இனி தப்பவே முடியாது!
டெல்லி: ஒவ்வொரு நாளும் வெளியே செல்லும்போது.. அவ்வளவு ஏன் வீட்டில் கதவு, ஜன்னலைத் திறந்தால் கூட விஷத்தை சுவாசிக்கும் சூழலுக்கு நீங்கள் தள்ளப்பட்டால் எப்படி இருக்கும்.. அப்படியொரு மோசமான சூழலில் தான் டெல்லி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் டெல்லி என்சிஆர் பகுதியில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் டெல்லி மக்கள் சுவாசிக்கக் கூட முடியாத அளவுக்கு மிக மோசமான சூழல் ஏற்படுகிறது. இதற்குக் கட்டிடத் தூசி, அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஏர் பியூரிபையர்கள்
இதனால் டெல்லியில் ஏர் பியூரிபையர்கள் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அங்குப் பெரும்பாலான வீடுகளில் ஏர் பியூரிபையர்கள் மூலம் காற்றை சுத்தப்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அப்போது தான் பத்திரமாக சுவாசிக்க கூட முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு இருந்தாலும் அங்கு மக்கள் கதவுகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டு இருக்க வேண்டிய சூழலே இருக்கிறது.
சில நொடிகள் கதவைத் திறந்தாலும் கூட நிலைமை மோசமாகிவிடுகிறதாம்.. அதைக் காட்டும் ஒரு சம்பவம் தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அந்த நபரின் வீட்டில் 4 ஏர் பியூரிபையர்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. அவர் தனது வீட்டின் கதவைக் கொஞ்சம் திறந்து வைக்கிறார். அப்படியே சில நொடிகளில் காற்றின் தரக் குறியீடு பாதுகாப்பானது என்ற நிலையில் இருந்து அபாயகரமான நிலைக்கு மாறியது.
நொடிகளில் நிலைமை மோசம்
முதலில் ஏர் பியூரிபையரில் காற்றுத் தரம் 97 என்று இருப்பதாக அதில் இருந்தது. வீட்டிற்குள் சுத்தமான அல்லது சுவாசிக்கக்கூடிய காற்று இருப்பதையே அது குறிக்கிறது. அப்போது அந்த நபர் கதவைக் கொஞ்ச நேரம் திறந்து வைக்கிறார். கதவைத் திறந்தவுடன் ஓரிரு நொடிகளில் காற்றின் தரம் 170க்கு போகிறது.. பிறகு அது 230க்கு செல்கிறது. ஆனால், அத்தோடு நிற்கவில்லை.. ஒரே நிமிடத்திற்குள் அது காற்றின் தர அளவு 500ஐ தாண்டி உயர்கிறது.

அந்த நபர் தனது ட்வீட்டில் மேலும், "வீட்டில் 24 மணி நேரமும் வீட்டில் 4 ஏர் பியூரிபையர்கள் இயங்குகின்றன. அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்போது காற்றின் அளவு 100. மெயின் டோரை திறந்தால் சில நொடிகளில் காற்றின் தரம் 500ஐ தொட்டது. டெல்லியில் வாழ்க்கை நரகமாகிவிட்டது, ஆனால் அரசோ பீகார் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
விஷமாக மாறுகிறது
இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வெறும் சில நொடிகளில் காற்றின் தரம் மோசமாக மாறியதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் முடியாமல் திகைத்தனர். நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "டெல்லியில் காற்றின் தரம் வீடுகளை விஷ வாயு அறைகளாக மாற்றுகிறது.. அதே நேரத்தில் அரசியல்வாதிகள் வேறு மாநிலங்களில் வாக்குகளைக் கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். காற்று மாசைக் குறைக்க அரசு முன்னுரிமை தர வேண்டும்.. சுத்தமான காற்று என்பது ஒரு ஆடம்பரமாக இருக்கக்கூடாது!" என்று பதிவிட்டுள்ளார்.
செர்னோபிலில்
மற்றொரு நபர் அணு ஆயுதப் பேரழிவு ஏற்பட்ட செர்னோபிலில் வாழ்வது போல உணர்வதாகப் பதிவிட்டிருக்கிறார். இன்னொரு நபர், "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் டெல்லியை விட்டு வெளியேறுங்கள்.. இல்லையென்றால் மோசமான நோய்கள் ஏற்படலாம்.. இது மிகவும் ஆபத்தான சூழல்" என பதிவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் இதைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சுத்தமான காற்று என்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications