8 மாதங்கள்.. 46 கிலோ எடையை குறைத்த போலீஸ் உயரதிகாரி.. வியக்க வைக்கும் ஆச்சர்ய 'டயட் ப்ளான்'
டெல்லி: டெல்லி காவல்துறை உயரதிகாரி ஒருவர் கடந்த எட்டே மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்து, சூப்பர் போலீஸாக அவதாரம் எடுத்துள்ள புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல் எடையை குறைக்க முடிவு செய்த அவர், உணவுப்பழக்கத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றியதாலேயே, இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு கிலோவை குறைக்க முடிந்ததாக கூறுகிறார்.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க பல சூப்பர் டிப்ஸ்களையும், தான் கடைப்பிடித்த 'டயட்' பிளானையும் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார் அந்த போலீஸ் அதிகாரி.

130 கிலோவாக அதிகரித்த எடை
டெல்லி காவல்துறையில் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி (45). தனது 24-வது வயதில் போலீஸ் பணியில் சேர்ந்திருக்கிறார். பணியில் சேரும் போது ஒல்லியான உடல்வாகுடனேயே ஜிதந்திர மானி இருந்திருக்கிறார். பின்னர், பணிச்சுமை, இரவுப்பணி உள்ளிட்ட காரணங்களால் ஜிதேந்திர மானியின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், முதலில் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை. ஆனால், நாளாக நாளாக ஜிதேந்திர மானியின் உடல் எடை கணிசமாக அதிகரிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில், அவர் உடல் எடை 130 கிலோவாக அதிகரித்தது.

எகிறிய சர்க்கரை, பிபி
இப்படி உடல் எடை அதிகரித்ததால் வீட்டில் உள்ளவர்களும், உடன் பணியாற்றுபவர்களும் ஜிதேந்திர மானியிடம் உடல் எடையை குறைக்குமாறு கூறியுள்ளனர். எனினும், மானி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை, இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார் ஜிதேந்திர மானி. அப்போது மருத்துவரின் அறிவுரையின்படி, முழு உடல் பரிசோதனையை செய்தார் மானி. அப்போது வந்த ரிசல்ட்டை பார்தது அவருக்கு தலை சுற்றிவிட்டது. ஏனெனில், சர்க்கரையும், ரத்த கொதிப்பும் ஆபத்தான கட்டத்தை தாண்டி எகிறி இருந்தது. மேலும், உடலில் கொழுப்பின் அளவும் மிக அதிகமாக இருந்தது.

களத்தில் இறங்கிய சிங்கம்
இந்த ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர், உடனடியாக உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, உடல் எடையை குறைக்க முடிவெடுத்த ஜிதேந்திர மானி, தினமும் உடற்பயிற்சி செய்வது என முடிவெடுத்தார். ஒரு மாதம் உடற்பயிற்சிக்கு பின்னர், அவர் உடல் எடை வெறும் 2 கிலோ மட்டுமே குறைந்திருந்தது. அப்போதுதான், தனது உணவுப்பழக்கத்தையும் சேர்த்து மாற்ற முடிவு செய்திருக்கிறார். இப்படி செய்ததில் அவரது உடல் எடை எட்டே மாதங்களில் சரசரவென 46 கிலோ குறைந்தது. இப்போது 84 கிலோ எடையுடன் ரியல் சிங்கம் போலீஸாக காட்சியளிக்கிறார் ஜிதேந்திர மானி.

என்னென்ன உடற்பயிற்சி.. டயட் ப்ளான்?
இதுகுறித்து ஜிதேந்திர மானி கூறுகையில், "உடல் எடையை குறைக்க முடிவு செய்ததும், தினமும் 15 ஆயிரம் அடி (காலடி) நடக்க தீர்மானித்தேன். சில சிறிய உடற்பயிற்சிகளையும் செய்தேன். எனினும், உடல் எடை குறையவில்லை. அப்போதுதான், உணவு முறையை மாற்ற வேண்டும் என்பது எனக்கு தெரிந்தது. அதிகமாக சப்பாத்தியையும், சாதத்தையும் உண்ணும் பழக்கமுடைய நான், வெறும் பழங்கள், காய்கறிகள், சூப் வகைகளை சாப்பிட தொடங்கினேன். அதிக அளவில் காய்கறிகள் ஒரே ஒரு சப்பாத்தி என எனது உணவு முறையை மாற்றினேன். அதிக தண்ணீர் குடித்தேன். முக்கியமாக, சர்க்கரையை அறவே தவிர்த்துவிட்டேந். ஒரு நாள் நடந்தால், மறுநாள் மெதுவாக ஓடுவேன் (ஜாகிங்). இவ்வாறு 8 மாதங்கள் கடைப்பிடித்ததால் எனது உடல் எடை 46 கிலோ குறைந்தது. இப்போது மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன். கண்ணாடியை பார்க்கும் போது தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர முடிகிறது. முன்பை விட வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட முடிகிறது" எனக் கூறினார் ஜிதேந்திர மானி.












Click it and Unblock the Notifications