டெல்லியில் பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு.. போன்கள் பறிமுதல்!
டெல்லி: டெல்லியில் பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு தொடர்பானவர்களிடம் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல செய்தியாளர்களின் போன்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூஸ் கிளிக் நிறுவனத்தில் எழுதும் பலரும் இந்த ரெய்டில் குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி போலீசாரின் ஸ்பெஷல் யூனிட் மூலம் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

ரெய்டு பின்னணி: டெல்லி போலீசார் இன்று நியூஸ் கிளிக் மீது தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நியூஸ் கிளிக் செய்தி போர்ட்டலுடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த செய்தி இணையதளம் சீனாவிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது வந்துள்ளது.
சீனாவிடம் நிதி உதவி பெற்று இந்தியாவிற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாக புகார் வைக்கப்படுகிறது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இந்த ரெய்டில் யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில ஊடகவியலாளர்கள் விசாரணைக்காக போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணை, ரெய்டு எல்லாம் வாரண்ட் இல்லாமல் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
அதோடு தேர்தல் நெருங்குவதால் செய்தியாளர்கள் குறி வைக்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, அமலாக்க இயக்குனரகம் இந்த செய்தி இணையதளம் மீது வழக்குப் பதிவு செய்து அதன் நிதி குறித்து விசாரணை நடத்தியது. நியூஸ் போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட சில சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.
என்ன புகார்: கடந்த ஆகஸ்ட் மாதம், நியூ யோர்க் டைம்ஸ் விசாரணையில், சீன அரசுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்யும் விதமாக நியூஸ் கிளிக் செயல்படுவதாக புகார் வைக்கப்பட்டது.
அமெரிக்க மில்லியனர் நெவில் ராய் சிங்கத் என்பவர் பணம் கொடுத்ததன் பெயரில் நியூஸ்க்ளிக் சீன ஆதரவு பிரச்சாரத்தை செய்ததாக கூறப்பட்டது. அதற்கு முன்பே 2021 ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு இந்த செய்தி நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. அதில் செய்தி போர்டல் மற்றும் அதன் நிதி ஆதாரங்கள் விசாரிக்கப்பட்டன .
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் வழக்கு தொடர்ந்தது அங்கே விசாரணையும் செய்தது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் NewsClick நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பை வழங்கியது, மேலும் இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு இடையில்தான் தற்போது ரெய்டு நடக்கிறது.
அதேபோல் வரி ஏய்ப்பு வழக்கில் 2021 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகளால் செய்தி போர்ட்டல் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே டெல்லியில் பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு தொடர்பானவர்களிடம் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல செய்தியாளர்களின் போன்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications