3 மாணவர்கள் மரணம்: ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக போராட்டம்.. தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்!
டெல்லி: டெல்லி பெருமழையால் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமே டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுதான் என்பது பாஜக குற்றச்சாட்டு. இதனை முன்வைத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டியடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் கனமழை கொட்டியது. இந்த பெருமழையால் ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

பயிற்சி மையத்தின் கீழ் தளம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் 3 மாணவர்களும் இதில் சிக்கினர். பின்னர் 3 மாணவர்களும் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் உக்கிரமான போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராகவும் கொந்தளிப்பை டெல்லி மாணவர்கள் வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திலும் இன்று இந்த சம்பவம் குறித்து பேசப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மாணவர்களை சந்திக்காததும் சர்ச்சையாகி இருக்கிறது.
இதனிடையே 3 மாணவர்கள் பலியான சம்பவத்துக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுதான் காரணம் என குற்றம்சாட்டியது பாஜக. மேலும் மாணவர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாஜகவினர் ஒன்று திரண்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனாலும் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பாஜகவினரை அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். அப்போதும் பாஜகவின் ஆம் ஆத்மி அலுவலகம் முன்பிருந்து நகர மறுத்தனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.












Click it and Unblock the Notifications