தசரா: டெல்லியில் ராவணன் உருவபொம்மையுடன் தமிழ்நாட்டு விவிஐபி உருவத்தை எரிக்க ஜரூர்- யார் தெரியுமா?
டெல்லி: தசரா விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மைதானத்தில் இன்று ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகளை எரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ராவணன் உருவபொம்மையுடன் 'சனாதன தர்மத்தை எதிர்ப்போர்' உருவ பொம்மை ஒன்றும் எரிக்கப்பட இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகள் தீ வைத்து எரிக்கப்படும். இது ராமலீலா என அழைக்கப்படுகிறது. இந்த ராமலீலா நிகழ்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் காலம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, வடக்கே ராவணனை எரித்தால் தெற்கே ராமரை எரிப்போம் என எச்சரித்திருந்தார். திராவிடர் கழகத் தலைவராக இருந்த மணியம்மையார், ராவண லீலா போராட்டம் நடத்தினார். 1990களில் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் ராவண லீலாவை நடத்தி ராமர் உருவபொம்மையை எரித்தனர்.

இந்த ஆண்டும் டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தசரா விழாவை முன்னிட்டு ராவணன், மேகநாதன் கும்பகர்ணன் உருவங்களை எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான மூன்று உருவங்களுடன் இந்த ஆண்டு 'சனாதன தர்ம எதிர்ப்பாளர்கள்' என்ற உருவபொம்மை ஒன்றையும் எரிக்க இருக்கின்றனராம். இதற்கான உருவ பொம்மையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்; டெங்கு, மலேரியா, காலரா வைரஸ் ஒழிக்கப்பட்டது போல மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்துத்துவா அமைப்பினர் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார், வழக்குகள் என பெரும் பிரளயமே ஏற்பட்டது. ஆனாலும் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என அமைச்சர் உதயநிதி தற்போதும் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
#WATCH | Effigies of Ravan, Meghanad and Kumbhkaran, along with those opposing Sanatan Dharma, installed at Delhi's Red Fort ground for #Dussehra pic.twitter.com/B36VeKWrhj
— ANI (@ANI) October 24, 2023
இந்த பின்னணியுடன் தற்போது சனாதன தர்ம எதிர்ப்பாளர்கள் உருவ பொம்மை ஒன்றை தயார் செய்து டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையுடன் எரிக்க இருக்கிறார்களாம். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மை என நேரடியாக குறிப்பிடாமல் சனாதன தர்ம எதிர்ப்பாளர்கள் என்ற பெயரில் உருவபொம்மையை தயார் செய்து எரிக்க இருப்பதாக ஊடக நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications