டெல்லி பெண் கூட்டாக பலாத்காரம்: ஹரியானா பாஜக தலைவர் மோகன் லால் படோலி மீது இமாச்சல் போலீஸ் வழக்கு
டெல்லி: இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற டெல்லி பெண்களை கூட்டாக பலாத்காரம் செய்ததாக ஹரியானா மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி, பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண்கள் கடந்த 2023-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தில் உள்ள கவுசாலி நகரத்தில் உள்ள விடுதியில் அந்த பெண்கள் தங்கியிருந்த போது கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பலாத்கார சம்பவத்தை வெளியே பகிரங்கப்படுத்தினால் பொய் வழக்குகளில் சிறையில் தள்ளுவோம் எனவும் மிரட்டியிருக்கின்றனர்.
தற்போது இந்த சம்பவத்தில் ஹரியானா மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி, பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் மீது இமாச்சலப் பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவரம் வெளியே வந்துள்ளது. இருவர் மீதும் கடந்த டிசம்பர் மாதம் பதிவான போலீஸ் முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மோகன் லால் படோலி திட்டவடமாக மறுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் முதல் தகவல் அறிக்கையில், மோகன் லால் படோலியும் ராக்கி மிட்டலும் இளம் பெண்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்றுள்ளனர். தமது ஆல்பத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க ஆசைவார்த்தை காட்டி இருக்கிறார் ராக்கி மிட்டல்; தாம் மிகப் பெரிய அரசியல்வாதி; அதனால் அரசாங்கத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்துள்ளார் மோகன் லால் படோலி; பின்னர் இருவரும் அந்த பெண்களுக்கு மதுவை கட்டாயமாக ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து பலாத்காரம் செய்துள்ளனர் என இடம் பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications