மீனவர்கள் விவகாரம் குறித்து.. இலங்கை அதிபருடன் பேசியது என்ன? பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
டெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மீனவர்கள் விவகாரம் குறித்து பேசப்பட்டதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து விலகினர். இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவித்த போது இந்தியா பெரும் உதவி அளித்தது. வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு இந்தியா, இலங்கைக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டியது. இதனால், இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று நிமிர்ந்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, "2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
யுபிஐ பரிவர்த்தனை: அப்போது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது. மேலும் இருநாடுகள் இடையேயான கடல்வழி மற்றும் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் யுபிஐ, யுபிஐ பணப்பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது, பொருளாதார மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்கிரமேசிங்கே ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கை என்பது நம்முடன் கொள்கை ரீதியாக நெருக்கமாக உள்ளது.
பேசப்பட்டது என்ன: இன்றைய பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்கு இடையே பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி, வர்த்தகம் பற்றியும் பேசினோம். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இதில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என வலியுறுத்தினேன். இலங்கையின் மறுகட்டமைப்பு, சமூக நல்லிணக்கம் பற்றி பேசினோம்.

இலங்கை அரசு தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறேன்'' என்றார். அதேபோல், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், "பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு உதவிய இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.
தமிழில் மோடி ட்வீட்: இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டும் என்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications