திரும்ப திரும்ப பொய் சொல்லாதீங்க! பிஎம்ஶ்ரீ கடித விஷயத்தில் தர்மேந்திர பிரதானை வெளுத்தெடுத்த கனிமொழி
டெல்லி: தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தக் கூடிய பிஎம்ஶ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொண்டதாக மீண்டும் மீண்டும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவலை தெரிவிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது எக்ஸ் பக்கத்தில் நேற்று, மத்திய அரசுக்கு பிஎம்ஶ்ரீ திட்டம் தொடர்பாக எழுதிய கடிதத்தைப் பதிவிட்டு, மும்மொழிக் கொள்கையை கொண்ட பிஎம்ஶ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரம் என வெளியிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் மத்திய அரசின் பிஎம்ஶ்ரீ பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, தமிழ்நாடு அரசு அமைக்கும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசின் இந்தக் கடிதத்தில் தெளிவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையையோ, தேசிய கல்விக் கொள்கையையோ ஏற்பதாக எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கவே இல்லை.. இத்தகைய திரிபுவேலைகளை நிறுத்துங்கள். இவ்வாறு கட்டமாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் மத்திய அரசு பழிவாங்குகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு. சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? தமிழ்நாட்டுக்கான கல்விநிதி ரூ.2000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு
தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சுக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த, தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால் தற்போது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சனை செய்கிறார்கள். தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள். ஜனநாயகப் பண்பு இல்லாதவர்கள் என்றார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கனிமொழி எம்பி பேசுகையில், தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இந்த பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கல்விக்கான நிதி தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்தோம். அப்போது தமிழ்நாட்டு அமைச்சரும் உடன் இருந்தார். தேசிய கல்விக் கொள்கையில் பிரச்சனை உள்ளது. அதை எங்களால் ஏற்கமுடியாது. அதேபோல் மும்மொழி கொள்கையையும் ஏற்க முடியாது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது. எங்களுக்கான நிதியை ஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். நாங்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
மன்னிப்பு கேட்ட பிரதான்
இதன் பின்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்றார். ராஜ்யசபாவில் பேசுகையிலும், 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாடு அரசு, பிஎம்ஶ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொண்டுவிட்டது என பழைய பல்லவியை எக்ஸ் பக்கத்தில் பாடியிருக்கிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications