Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீங்கள் அரசனாகவே இருந்துவிட முடியாது.." குற்றவியல் அடையாள மசோதாவிற்கு எதிராக தயாநிதி மாறன் ஆவேச உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா மக்கள் விரோதமானது எனவும், கூட்டாட்சிக்கு எதிரானது என்று, திமுகவைச் சேர்ந்த, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசினார்.

சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்க அனுமதியளிக்கும் வகையிலான, குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதன்படி, எந்தவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்ட குற்றவாளி அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும், காவல் அதிகாரிகளுக்கு கை விரல், கால் தடம் போன்ற பதிவுகளை வழங்க வேண்டும்.

தயாநிதி மாறன் எம்.பி.

தயாநிதி மாறன் எம்.பி.

மேலும் சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கவும் இந்த மசோதா அனுமதியளிக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் இந்த மசோதா மீதான விவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். அதேநேரம், இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசினர்.

மக்கள் விரோத மசோதா

மக்கள் விரோத மசோதா

குறிப்பாக, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா மக்கள் விரோதமானது எனவும், கூட்டாட்சிக்கு எதிரானது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் பேசிய தயாநிதி மாறன், இந்தியாவின் சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கை 2020ன் தரவுகளை மேற்கோள் காட்டி பேசினார். அதன்படி, நமது நாட்டில் உள்ள சிறைகளில் 4,88,511 பேர் சிறைவாசிகளாக உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட இது 20% அதிகம், இதில், தண்டனை பெற்றவர்கள் 1,12,589 பேர். விசாரணைக் கைதிகள் 3,71,848 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்டார் தயாநிதி மாறன்.

உரிமைகளுக்கு எதிரானது

உரிமைகளுக்கு எதிரானது

மேலும் அவர் பேசுகையில்.. அதாவது 70% சதவீதம் கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு, அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை சிறியதாகதான் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். நமது உள்துறை அமைச்சர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம் காவல் துறையின் செயல்திறன் மேம்படும் என்றும், குற்றம் நடந்த 24 மணி நேரம், 48 மணி நேரம் அல்லது 56 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்றும் உள்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் உண்மையில் அப்படி இல்லை, அடிப்படையில் இந்த மசோதா ஒரு குடிமகனின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. இதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.

எப்போதுமே அரசனாக இருக்க முடியாது

எப்போதுமே அரசனாக இருக்க முடியாது

நீங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள். நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? நீங்கள் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது, பிரதமர் அந்த மாநில முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது மத்திய அரசு மாநிலங்களின் உரிமையை எடுத்துக் கொள்வதாக நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். நீங்கள் மத்தியில் வந்து அமர்ந்ததும் அனைத்து அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்களது வாழ்க்கை முழுவதும் நீங்கள் அரசராக இருக்க முடியாது. காங்கிரசுக்கு எந்த நிலை ஏற்பட்டதோ, அது உங்களுக்கும் ஏற்படக்கூடும். எனவே மாநில அரசின் அனைத்து உரிமைகளையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.

 தப்பியோடிய மல்லையா எங்கே?

தப்பியோடிய மல்லையா எங்கே?

உங்களது அரசாங்கம் சிறுபான்மையினரை குறிவைப்பதற்கு பெயர் பெற்றது. எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் முதலில் சிறுபான்மையினர்தான் பாதிக்கப்படும் வகையில் கொண்டு வருகிறீர்கள். நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் உங்களது பாதுகாப்பின் கீழ் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் வழியாக வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அவர்களை திரும்ப அழைத்து வருவதற்கு நீங்கள் என்ன சட்டம் இயற்றி உள்ளீர்கள்?

அவசரம் எதற்கு?

அவசரம் எதற்கு?

மத்திய அரசு ஒரு கண்காணிப்பு நிலையை உருவாக்க முயற்சிக்கிறதா. தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுவதை காணமுடிகிறது. முதலாவதாக, இந்த அவையில் தரவு பாதுகாப்பு மசோதா இன்னும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது, அதைத் தாக்கல் செய்வதற்கு முன், உள்துறை அமைச்சர் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவைக் கொண்டு வருவதற்கு என்ன அவசரம்?

துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு

துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா வெளிப்படையானது எனவும், குற்றத்தின் தன்மை அல்லது தண்டனை காலத்தின் அடிப்படையில் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வகைப்பாட்டையும் பரிந்துரைக்கவில்லை என அமைச்சர் கூறுகிறார், ஆனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனியுரிமை உண்டு, கட்டைவிரல் பதிவு, கையொப்பம், அனைத்தும் எடுக்கப்படுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. இதுபோன்ற பதிவுகள் விசாரணை என்ற போர்வையில் சேமிக்கப்படும்போது அல்லது பகிரப்படும்போது, ​​அதை துஷ்பிரயோகம் செய்வதற்கான பெரிய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார். அப்போது, ஆளும் கட்சி வரிசையில், அமித் ஷா அமர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+