"எளிய மக்களை இழிவுபடுத்தாதீங்க".. இலவசங்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சால் கெஜ்ரிவால் கோபம்!
டெல்லி: இலவசங்கள் கொடுப்பது குறித்து பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், ஏழை மக்களை இப்படி இழிவுபடுத்த வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசங்களுக்காக தங்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக வரி செலுத்துபவர்கள் வேதனைப்படுவதாக கூறியிருந்தார்.

மோடியை கண்டித்து ட்விட்
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், 'தங்களின் வரிப்பணம் சரியான முறையில் செலவிடப்பட வேண்டும் என்று வரி செலுத்துபவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலவசங்களுக்காக தங்கள் வரிப்பணம் செலவிடப்படுவதை கண்டு வரி செலுத்தும் மக்கள் வேதனை அடைகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் வெளியிட்டுள்ளார்.

இழிவுப்படுத்த கூடாது
அந்த ட்விட் பதிவில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- விலைவாசி உயர்வால் மக்கள் வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு ஏன் இலவச கல்வி, இலவச சிகிச்சை, இலவச மருந்துகள், இலவச மின்சாரம் ஆகியவை கிடைக்கக் கூடாது. அரசியல் வாதிகள் பல சலுகைகளை இலவசமாக பெறுகின்றனர். பல பணக்காரர்களின் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. இதை ரேவ்டி (இலவசம் ) என்று திரும்ப திரும்ப கூறி எளிய மக்களை இழிவுப்டுத்தக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2 சிலிண்டர்கள் இலவசம்
முன்னதாக, இலவசங்களுக்கு எதிராக ஒருபக்கம் கருத்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக அவருடைய பாஜக ஆளும் அரசு அறிவித்து உள்ளதே என சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை தனது ட்விட் பதிவில், குஜராத்தில் இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தது இலவசத்தில் சேராது என்று சேர்த்து சொல்லியிருக்கலாம் என கேலி செய்து இருந்தார்.

குஜராத் தேர்தல்..
182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. குஜராத்தை பொருத்தவரை பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. பிரதமர் மோடியின் சொந்தமாநிலமான குஜராத்தில் இம்முறை அக்கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இலவச திட்டங்கள்..
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது. அடிக்கடி குஜராத் சென்று தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் இலவச மின்சாரம், தரமான இலவச கல்வி போன்ற பல்வேறு இலவச திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளித்து வருகிறார். இந்த நிலையில், தான் பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக பேசியிருப்பதற்கு கெஜ்ரிவால் தனது கடும் விமர்சனத்தை பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications