'சீரம் நிறுவனத்திற்கு அனுமதி தரக்கூடாது..' அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை.. ஏன் இந்த திடீர் முடிவு
டெல்லி: 2-17 வயதுடைய சிறார்களுக்கு புதிய கோவாவாக்ஸ் என்ற தடுப்பூசி சோதனை நடத்த சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
கொரோனா பரவல் இன்னும் எந்த நாட்டில் இருந்தும் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
கொரோனா வேக்சின்கள் மூலம் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனா வேக்சின்
அதேபோல இந்தியாவிலும் வேக்சின் போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா வேக்சினுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது 18+ வயதுடையவர்களுக்கு மட்டுமே வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் மத்தியில் சோதனை
கொரோனா 3ஆம் அலையால் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், சிறார்களுக்கு எந்தவொரு வேக்சினும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. 2-17 வயதுடையவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி சோதனை மட்டுமே தற்போது நடைபெறுகிறது. இந்தச் சூழலில் சீரம் நிறுவனம் கோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியை 2-17 வயதுடையவர்களுக்கு மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

அனுமதி அளிக்கக் கூடாது
ஆனால், சிறார்கள் மத்தியில் கோவாவாக்ஸ் சோதனைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இன்னும் எங்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே, முதலில் பெரியவர்கள் மத்தியில் சோதனை நடத்திய பிறகு சிறார்களுக்குச் சோதனை நடத்துமாறு வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

நோவாவாக்ஸ் வேக்சின்
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியைத் தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவாவாக்ஸ் என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வேக்சின் கொரோனாவுக்கு எதிராக 90.4% வரை பலன் அளிப்பது தெரியவந்துள்ளது. பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்குப் பிறகு இது தான் அதிகம். இந்தியாவில் இந்த வேக்சினுக்கு வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications