ஹைஅலர்ட்.. புதிய நாடாளுமன்றம் திறப்பு நாளில் டெல்லி எல்லைகளுக்கு சீல்.. பின்னணி என்ன தெரியுமா?
டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் (மே 28)ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் மே 28 ல் டெல்லி எல்லைகளை மூட போலீசார் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள பரபர தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ( மே 28) திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும். ஆனால் திறந்து வைக்க அழைப்பு விடாமல் பிரதமர் நரேந்திர மோடி அவரை புறக்கணித்து தானே திறந்து வைக்க உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் இந்த விழாவை காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளன. பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்பட 19 எதிர்கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் தான் நாளை மறுநாள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதிக பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டம் பார்க்க மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
இதற்கிடையே தான் திறப்பு விழாவை அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக நடத்த டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தினமான மே 28 ல் டெல்லி எல்லைகளை மூட டெல்லி போலீசார் முடிவு செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தொடர்ந்து டெல்லியில் போராடி வருகின்றனர். ஆனால் போலீசார் இன்னும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே தான் தான் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கணைகளுக்கு ஹரியானா காப்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்கள் மே 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அதன்அருகே பெண்கள் பங்கேற்கும் மகாபஞ்சாயத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமானவர்கள் மே 28 ல் டெல்லிக்கு படையெடுக்க வாய்ப்புள்ளது.
இதனை தடுக்கும் வகையில் தான் டெல்லியில் அனைத்து எல்லைகளுக்கு சீல் வைத்து மூட போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே கூட்டம் கூடவும், போராட்டங்கள் நடத்தவும் போலீசார் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications