பிரதமர் என்றும் பாராமல்.. என்ன வார்த்தை பேசிட்டாரு ராகுல்! ஹைகோர்ட் அதிரடி.. ஆக்ஷனில் தேர்தல் ஆணையம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் அடிப்பவர் என்பது போல் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் அவர் கூறும் கருத்துகள் விவாதத்தை கிளப்பி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

இதையடுத்து ராகுல் காந்தி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று உரையாற்றினார். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி கூறிய வார்த்தை வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.
அதாவது ராகுல் காந்தி, ‛‛பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் ஒரு நபரிடம் கைவரிசை காட்ட நினைத்தால் முதலில் கவனத்தை திசை திருப்புவார்கள். ஒருவர் கவனத்தை திசைதிருப்ப இன்னொருவர் பிக்பாக்கெட் அடிக்க, தேவைப்பட்டால் 3வது நபர் மிரட்டல் கூட விடுப்பார். இதேபோல் தான் பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்ப அதானி பாக்கெட்டுகளை நிரப்புகிறார். அமித்ஷா லத்தியை பயன்படுத்துகிறார்'' என தெரிவித்து இருந்தார்.
பிக்பாக்கெட் அடிப்பவர்களுடன் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக தரப்பில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் ராகுல் காந்திக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. நவம்பர் 22ம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸில் சம்பவம் குறித்து நவம்பர் 26ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் ராகுல் காந்தி தரப்பில் இன்னும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
இதற்கிடையே தான் ராகுல் காந்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசியல் தலைவர்கள் இதுபோன்ற பேச்சுகளை பேசாமல் தவிர்க்கும் வகையில் வழிக்காட்டுதல்கள் வழங்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரத்நகரை சேர்ந்தவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமயிலான அமர்வு இன்று மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள் சுவையானதாக இல்லை. இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது. இதனால் பதில் வராத இந்த நோட்டீஸ் தொடர்பாக 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications