மருத்துவ சிகிச்சை மீதே சந்தேகம்! இதய அடைப்பை போலியாக காட்ட முடியுமா? அமலாக்க துறை Vs செந்தில் பாலாஜி
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறியாகியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம் செய்தது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையும் விசாரணை செய்து வருகிறது. இது குறித்து செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது.

இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் திடீரென அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதில் அவருடைய இதயத்தின் 4 அறைகளிலும் அடைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தர அனுமதிக்க வேண்டும் என அவருடைய மனைவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்ற நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவே அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என அமலாக்கத் துறை பட்டியல் போட்டு தயாராக இருந்தது. ஆனால் மருத்துவ சிகிச்சை இடையூறு ஏற்படக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்ததால் அமலாக்கத் துறையால் விசாரணை நடத்த முடியவில்லை.
தங்கள் விசாரணைக்கு சிக்கல் ஏற்பட்டு விசாரிக்காமலேயே அமலாக்கத் துறை காவல் முடிந்து விடுமோ என்ற எண்ணத்தில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத் துறை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அவர் சரமாரி கேள்விகளை எழுப்பினார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் மீது சந்தேகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அமர்வு தெரிவித்தது.
மேலும் மருத்துவமனையில் உள்ள ஒருவரை காவலில் எடுக்க முடியுமா. உடல்நிலை சரியில்லை என மருத்துவக் குழு சான்றளித்த பிறகு காவலில் எடுக்க கோருகிறீர்களா? செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியானதும் விசாரணை நடத்தலாமே என நீதிபதி தெரிவித்தார். அப்போது அமலாக்கத் துறை வாதம் செய்கையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறியாக உள்ளது.
விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி இவ்வாறு நடந்து கொள்கிறார் என அமலாக்கத் துறை தெரிவித்தது. அதற்கு நீதிபதி, மீண்டும் ஒரு மருத்துவக் குழுவை வைத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு முழு அதிகாரம இருக்கிறது என்றார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் வழக்கறிஞர் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதயத்தில் 4 அடைப்புகளை எவ்வாறு பொய்யாக காட்ட முடியும்? சிகிச்சையில் உள்ளவர் மீது போலி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை முன் வைக்கிறது என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.












Click it and Unblock the Notifications