முஸ்லிம்களுக்கு பாஜக சர்ப்ரைஸ்.. ரம்ஜானையொட்டி 32 லட்சம் பேருக்கு கிப்ட்.. என்னவெல்லாம் இருக்கு?
டெல்லி: வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்தியா முழுவதும் உள்ள ஏழ்மையான இஸ்லாமியர்கள் 32 லட்சம் பேருக்கு பாஜக ‛சவுகத் இ மோடி' என்ற பெயரில் கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. இந்த பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தற்போது நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இஸ்லாமியர்கள் உணவு சாப்பிடாமல் நோன்பு நோற்கின்றனர். அதன்பிறகு இஃப்தார் விருந்துடன் இஸ்லாமியர்கள் தங்களின் நோன்பை முடித்து வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் ரம்ஜான் கால இறுதிக்கட்ட ஷாப்பிங் என்பது தொடங்கி உள்ளது.
இதற்கிடையே தான் பாஜக சார்பில் நாட்டில் உள்ள 32 லட்சம் ஏழை இஸ்லாமியர்களுக்கு ‛சவுகத்- இ- மோடி' என்ற பெயரில் கிட் வழங்கப்படுகிறது. இது ரம்ஜான் பரிசாக கொடுக்கப்படுகிறது. ரம்ஜானை சிரமமின்றி கொண்டாடும் வகையில் இந்த கிட் என்பது இஸ்லாமியர்களுக்கு வழங்கபட உள்ளது.
இதற்கான தொடக்க விழா இன்று டெல்லி நிஜமாமுதீனில் நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வழிக்காட்டுதலின் படி ‛சவுகத் - இ - மோடி' கிட் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கிட் என்பது பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாஜகவின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த 32 ஆயிரம் பேர், 32 ஆயிரம் மசூதிகளுடன் சேர்ந்து இந்த கிட்டை ஏழ்மையான இஸ்லாமியர்களிடம் வழங்க உள்ளனர். இந்த கிட்டில் ஆடைகள், சேமியா, பேரீச்சம்பழம், உலர் பழங்கள், சீனி உள்ளிட்டவை இடம்பெற உள்ளது. ஆண்களுக்கான கிட் என்றால் குர்தா - பைஜாமா இருக்கும். பெண்களுக்கான கிட்டில் அவர்களுக்கான ஆடைக்கான துணி இருக்கும். இதில் ஒரு கிப்ட்டின் விலை ரூ.500 முதல் ரூ.600 வரை இருக்கும். இதன்மூலம் அவர்கள் ரம்ஜானை மகிழ்வுடன் கொண்டாட முடியும் என்கின்றனர் பாஜகவினர்.
இதுபற்றி பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், ‛‛சவுகத் இ - மோடி பிரசாரம் எனப்து ரம்ஜான் பண்டிகை மட்டுமின்றி பிற பிற சிறுபான்மையினர் விழாக்களுக்கும் விரிவு செய்யப்படும். அதன்படி புனித வெள்ளி, ஈஸ்டர், புத்தாண்டு உள்ளிட்டவற்றுக்கும் வழங்கப்படும். அதேபோல் ஈத் மிலான் கொண்டாட்டம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications