"வரலாற்று நிகழ்வு.." தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய தேர்தல் ஆணையர்
டெல்லி: நாளைய தினம் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறிய தேர்தல் ஆணையர், வாக்காளர்களுக்காக எழுந்து நின்று கைதட்டினார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு முதலே தொடர்ச்சியாக பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
செய்தியாளர் சந்திப்பு: இதற்கிடையே லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளது. இன்று பகல் 12.30 மணிக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். வழக்கமாகத் தேர்தல் அறிவிப்பு சமயத்தில் மட்டுமே தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தும். ஆனால், வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல் முறை.
2019இல் கூட ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடன் துணைத் தேர்தல் ஆணையர்களே செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த பிரஸ் மீட்: இன்று நடக்கும் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் நடைமுறைகள் குறித்துத் தேர்தல் ஆணையர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது. தேர்தல் தொடர்பாக 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளோம் என்ற தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார். மேலும், லோக்சபா தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறிய அவர், நாட்டில் ஜனநாயக கடமை ஆற்றியவர்களுக்கு நன்றி என்று சொல்லி எழுந்து நின்று கைதட்டினார்.
27 ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வாக்காளர்களை விட இரண்டு மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications